சென்னை; நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகத்தின் முதலாம் ஆண்டு விழா பிப்ரவரி 2ந்தேதி  கொண்டாடப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் ஏழைகளுக்கு உதவ தவெக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தி உள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வருகிற பிப்ரவரி 2-ந்தேதியுடன் 1 வருடம் நிறைவு பெறுகிறது. முதல் ஆண்டு நிறைவு விழாவை தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக கொண்டாட விஜய் திட்டமிட்டுள்ளார்.  இதை தொடர்ந்து பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள 5 கொள்கை தலைவர்கள் சிலைகளை கட்சி தலைவர் விஜய் திறந்து வைப்பதுடன் கட்சி கொடி ஏற்றி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்குகிறார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

மேலும் தவெகவின் முதலாமாண்டு விழாவை தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளிலும் அனைத்து இடங்களிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்கள், பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், அன்னதானங்கள் வழங்கி  கொண்டாட அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம்  தவெக பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் ஆலோசனை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தவெக கட்சியில் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில், காலியாக உள்ள சென்னை உள்பட சில மாவட்டங்களுக்கான மாவட்ட செயலாளர்கள் குறித்த அறிவிப்பு இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இநத் நிலையில், தவெகவின் கொள்ளை கோட்பாடுகள் பொதுமக்களை சென்றடையும் வகையில்,  முதலாமாண்டு விழாவை மாவட்டம், ஒன்றியம், நகரம், பகுதி கிளை வாரியாக விழாவை சிறப்பாக நடத்தி அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் நலத்திட்டங்களை நடத்தியும், ஆதரவற்றோர் மற்றும் முதியோர் இல்லங்களில் உணவு வழங்குதல் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம்,  பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விலையற்ற நோட்டு, புத்தகங்கள் வழங்குதல் உள்பட பல நலத்திட்ட உதவிகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.