சென்னை: திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீதான தேர்தல் வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.

முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய திமுக அமைச்சருமான ராஜகண்ணப்ன் மீது ஏராளமான ஊழல் வழக்குகள், தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்,  தேர்தல் வழக்குகளின் விசாரணைக்கு தடை கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திமுக அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு  எதிராக ராமநாதபுரம், சிவகங்கை நீதிமன்றங்களில்  வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த இந்த இரு வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்கவும், வழக்குகளை ரத்து செய்யவும் கோரி அமைச்சர் ராஜ கண்ணப்பன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதி வேல்முருகன் முன்பாக நடந்தது. அப்போது, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைகளுக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதி மறுப்பு தெரிவித்தார். அத்துடன் இந்த மனுவுக்கு மூன்று வாரங்களில் பதிலளிக்க சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும் பிப்.17-க்கு தள்ளி வைத்துள்ளார்.

முன்னதாக, கடந்த 2021ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது அமைச்சர் ராஜகண்ணப்பன் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக அவர் மீது பேரையூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். இதேபோல சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட தமிழரசியை ஆதரித்து பிரச்சாரம் செய்த ராஜகண்ணப்பன் தேர்தல் விதிகளை மீறியதாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகள் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளது.