சென்னை: பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  தனித்தீர்மானத்தை தாக்கல் செய்து பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில், இன்று ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆணையம் அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வந்த ஆணையத்தின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் பல அதிர்ச்சி யூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதைத்தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தி திணிப்புக்கு எதிராக சட்டப்பேரவையில் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார்.  சமீபத்தில், நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் அலுவல் மொழி தொடர்பாக மத்திய அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழு அளித்த அறிக்கைக்கு எதிராக, தமிழக சட்டப்பேரவையில் இன்று  தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நாடாளுமன்ற குழு குடியரசுத் தலைவரிடம் அளித்துள்ள பரிந்துரைகளை மத்திய அரசு நடைமுறைப்படுத்தக்கூடாது, இந்த பரிந்துரைகள்,  இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் என  தெரிவித்தார்.

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான், இந்திய ஒன்றியத்தில் இந்தி மொழியை திணிப்பதை ஒன்றிய அரசு தனது வழக்கமாகவே கொண்டுள்ளது. ஒ ரே நாடு ஒரே மொழி என்ற பெயரில் பிற தேசிய மொழிகளை அழிக்க முயற்சி செய்கிறது. பல்வேறு மொழியினர் வாழும் நாடு இது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகின்றனர். ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பாஜக அரசு முயற்சி செய்கிறது.

பாஜக அரசின் இதயம் முழுக்க முழுக்க இந்திக்காகவே துடிக்கிறது என்று குற்றம் சாட்டிய ஸ்டாலின், அனைத்து இந்திய தேர்வுகளையும் இந்தி மயமாக்க துடிக்கிறார்கள் எனவும், இந்தி தெரியாதவர்கள்  மத்திய அரசின் பணி பெற முடியாத வகையில் இந்தி மொழி திணிப்பு உள்ளது எனவும்  குற்றம் சாட்டினார்.

இதைத்தொடர்ந்து மற்ற கட்சி தலைவர்கள் தங்களது கருத்துளை பதிவிட்டு வருகின்றனர்.