சென்னை: வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் ஜெய்பீம் படத்திற்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித அங்கீகாரமும் வழங்கக்கூடாது என்று வன்னியர் சங்கம் சார்பில், அதன் வழக்கறிஞர் பாலு 8 பக்க கடிதம் எழுதி உள்ளார்.
நடிகர் சூர்யா நடிப்பில், அவரது குடும்பத்தினர் தயாரித்துள்ள ஜெய்பீம் படம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்திற்கு ஒரு சமூகத்தினர் ஆதரவு கொடுத்து வரும் நிலையில், திமுக உள்பட அரசியல் கட்சியினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால், வன்னியர் சங்கத்தின் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். சூர்யா குடும்பத்தினரை உதைப்போம் என மிரட்டி வருகின்றனர்.
மேலும் அந்த படத்தில் வரும் காவலரின் வீட்டில் இடம்பெற்றுள்ள வன்னியர் சங்க நாட்காட்டி பிரச்சினைய ஏற்படுத்தியதால், அதற்கு கண்டனம் தெரிவித்து, ரூ.5 கோடி நஷ்ட ஈடு தர வேண்டும் என்றும் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த படம் குறித்த திரையுலகிலும் இரு வேறான கருத்துக்கள் நிலவி வருகின்றன.
இந்த நிலையில், ஜெய்பீம் படத்துக்கு மத்திய அரசு மற்றும் தமிழக அரசு எந்தவித அங்கீகாரமும் வழங்கக்கூடாது என பாமக வழக்கறிஞர் பாலு 8 பக்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அதில், தமிழ்நாடு, புதுச்சேரி மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள வன்னியர் சமூக மக்களின் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டதே வன்னியர் சங்கம். இந்த சங்கத்தின் சின்னமாக அக்னி குண்டம் திகழ்கிறது. இந்த சின்னம் பல நூற்றாண்டுகளாக வன்னியர் சமூகத்தினர் செய்த தியாகத்தை நினைவுகூறும் வகையில் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு வாய்ந்த சின்னம் பொருந்திய நாட்காட்டியானது,
’ஜெய்பீம்’ திரைப்படத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் காவல் உதவி ஆய்வாளர் ஒருவரின் வீட்டில் இடம்பெற்றிருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இது வன்னியர் சங்கம் மற்றும் ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்திற்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது. அதுமட்டுமின்றி அந்த காவல் உதவி ஆய்வாளரின் பெயரை ’குரு’ என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த பெயர் வன்னியர் சமூகத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவருடையது.
இதன்மூலம் வன்னியர் சமூகத்தினர் தவறான செயல்களில் ஈடுபடக் கூடியவர்கள் என்பது போல் சித்தரித்துள்ளனர். இவை அனைத்தும் எதிர்பாராத வகையில் நடந்தது தெரியவில்லை. வேண்டுமென்றே திட்டமிட்டு ஒட்டுமொத்த வன்னியர் சமூகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தி தரும் வகையில் செயல்பட்டது போல் தெரிகிறது. சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்க வேண்டும் என்று படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர்,
அமேசான் நிறுவனம் ஆகியவற்றிற்கு 15.11.2021 அன்று சட்ட ரீதியாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 5 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளோம். இந்நிலையில் வன்னியர் சமூகத்தை இழிவுபடுத்தும் ’ஜெய்பீம்’ திரைப்படத்திற்கு மத்திய, மாநில அரசுகள் எவ்வித அங்கீகாரமும், விருதும் வழங்கக்கூடாது என்று வன்னியர் சங்கம் சார்பில் கேட்டுக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.