டெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் எல்.முருகனை அன்ஃபிட்  என திமுக எம்.பி. டி.ஆர்.பாலு பேசியது சர்ச்சையான நிலையில், அதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் டி.ஆர்.பாலு விளக்கம் அளித்தார்.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடரில் விவாதத்தின் போது, தமிழக வெள்ள நிவாரணம் குறித்து கேள்வி எழுப்பிய டி.ஆர்.பாலுவுக்கு பதில் அளிக்கும் வகையில்,  மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குறுக்கீடு செய்தார். இதனால் சலசலப்பு எழுந்தது. அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகனை ‘அன்பிட்’  என கடுமையாக விமர்சனம் செய்தார்.

முன்னதாக, 2023 டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் தமிழ்நாடு வெள்ளத்தில் மிதந்தது. அதுதொடர்பாக நிதியை வழங்குவது தொடர்பாக டி.ஆர்.பாலு பேசினார். அப்போது, தமிழத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மத்திய நிதியமைச்சர் மற்றும் குழுக்கள் நேரில் சென்று ஆய்வு செய்தன. அது வரவேற்கத்தக்கது. ஆனால் நிதி இன்றளவும் வழங்கப்படவில்லை. அதைத் தொடர்ந்து, வெள்ளத்தின் போது ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ரயில்களில் சிக்கித் தவித்தனர் என கூறிக் கொண்டிருந்த வேளையில் மத்திய இணையமைச்சர் எல். முருகன்  தவறான தகவலை பகிர வேண்டாம் என குறிக்கீடு செய்தார்.

இதில் ஆத்திரமடைந்த எம்பி டி.ஆர்.பாலு, “நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், எதற்காக தொடர்ந்து குறிக்கிட்டுக் கொண்டே இருக்கிறீர்கள்.. தயவு செய்து உட்காருங்கள் என்று கூறிக் கொண்டிருந்தவர், ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து, என்னது இது, ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறீர்கள், நீங்கள் நாகரீகமாக நடந்து கொள்ள கற்று கொள்ள வேண்டும். நீங்க எம்பியாக இருக்க Unfit, ஏன் அமைச்சராக இருக்கவும் Unfit என பேசினார். இதற்கு அவையில் இருந்த பாஜக எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

நாடாளுமன்ற விவகாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர்கள்  பிரகலாத் ஜோஷி மற்றும் அர்ஜூன் மேக்வால், “ஒரு பட்டியலின அமைச்சரை எவ்வாறு இப்படி ஒருமையில் சாடலாம். இந்த சாடல் திமுக-வின் நிலைபாட்டை தெளிவாக விவரிக்கிறது. ஒரு இணையமைச்சரை இவ்வாறு கூறுவதற்கான உரிமை எம்பி டிஆர் பாலுவுக்கு இல்லை” என்று அவைக் கூட்டத்திலே கொந்தளிப்பில் ஈடுபட்டனர். டி.ஆர்.பாலு பேச்சுக்கு  பாஜக அமைச்சர்கள், எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சலசலப்பு ஏற்பட்டு, திமுக எம்.பி.க்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, தலித் அமைச்சர் எல்.முருகனை திமுக எம்.பி. டி.ஆர்.பாலு அவமதித்து விட்டதாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் குரல் எழுப்பினர். டி.ஆர்.பாலு மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திதப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.பி. டி.ஆர்.பாலு,  நாடாளுமன்றத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விளக்கம் அளித்தார். அப்போது இது தொடர்பாக கேள்வி எழுப்பியவதும் தலித்தான், திமுக எம்.பி. ராஜா யார், அவரும் தலித்தானே என்றார். மேலும்,  நான் கேட்ட கேள்விக்கு அந்த துறை அமைச்சர் பதில் சொல்ல வேண்டும், ஆனால், இவர் சம்பந்தமில்லாமல் எப்படி பேசலாம்,  “வெள்ள நிவாரண நிதி தொடர்பான கேள்விக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்தான் பதில் அளிக்க வேண்டும். சம்பந்தமில்லாத அமைச்சரான முருகன் எழுந்து பதில் அளித்தார் எனக்கு ஜாதி மதம் எல்லாம் ஒன்றுதான். அவர்கள் அரசியல்ரீதியாக பேசினால், அதற்கு நான் பதில் சொல்ல முடியாது என்றவர் அண்ணாமலைக்கு எல்லாம் பதில் சொல்ல  முடியாது என்றார்.

தமிழகத்துக்கு நிவாரண நிதி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் பேசும்போது, எங்கள் பேச்சுக்கு பாதிப்பை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கோடு முருகன் செயல்பட்டார். தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறது; ஓரவஞ்சனையாக நடத்துகிறது. இதைக் கண்டித்து வரும் 8-ம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாக திமுக எம்பிக்கள் கருப்புச் சட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவார்கள்” என்றார்.