சென்னை: முதலமைச்சர் ஸ்டாலின் வெளிநாட்டு பயணத்தை முடித்துவிட்டு சென்னை திரும்பிய நிலையில், தனது ஸ்பெயின் பயணம் சாதனை பயணமாக அமைந்தது என கூறினார்.

தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், கடந்த ஜனவரி 27ம் தேதி ஐரோப்பிய நாடான ஸ்பெயினுக்கு புறப்பட்டு சென்ற முதலமைச்சர் சுமார் 12 நாட்களுக்கு பிறகு இன்று சென்னை திரும்பினார். அவரை விமான நிலையத்தில் திமுகவினர் வரவேற்றனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

“ தமிழ்நாட்டுக்கு பல்வேறு முதலீடுகளை ஈர்த்து திரும்பி இருக்கிறேன். ஸ்பெயின் பயணம் சாதனை பயணமாக அமைந்து இருக்கிறது. ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. ஸ்பெயின் நாட்டில் செயல்படும் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை தனித்தனியாக நேரில் சந்தித்தேன்.

காற்றாலை மின் உற்பத்தி, நீர் மறுசுழற்சியிலும் முன்னணி நிறுவனம் ஆசியானா, ரோக்கா நிறுவனம், ஹபக் லாய்டு நிறுவனம், அபர்ட்டில் நிறுவனம், கெஸ்டாம்ப் நிறுவன நிர்வாகிகளுடன் ஆலோசித்தேன். ரூ. 3440 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹபக்லாய்டு நிறுவனம் ரூ.2500 கோடி, அபர்ட்டிஸ் நிறுவனம் ரூ.540 கோடி, ரோக்கா நிறுவனம் ரூ.400 கோடி முதலீடு செய்ய உறுதி செய்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் பெருமளவில் வேலை வாய்ப்பை ஏற்படுத்தும் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. இதுபோன்ற அடுத்த பயணங்கள் திட்டமிடப் படும்” என தெரிவித்தார்.