தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும்! பட்டமளிப்புவிழாவில் முதல்வர் ஸ்டாலின்…

Must read

சென்னை: தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும் என சென்னை பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் உறுதி கூறினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இந்த விழாவில்  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் ஒரே  மேடையில் கலந்துகொண்டதுடன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

பட்டமளிப்பு விழாவில்  மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின்பின்னர் சிறப்புரை ஆற்றினார். தமிழகத்திற்கு மட்டுமல்ல, உலகின் வளர்ச்சிக்கு உதவியவர்களை உருவாக்கியது சென்னை பல்கலைக் கழகம் என்று கூறியதுடன், “இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் வளர்ச்சிக்கு காரணமானவர்களை உருவாக்கிய சிறப்பு சென்னை பல்கலைக்கழகத்திற்கு உண்டு.

தமிழக மக்களால் முதல்வராக ஆக்கப்பட்டுள்ள நான் அனைத்து மாணவர்களையும் முதல்வனாக ஆக்க உருவாக்கிய திட்டம் தான் ‘நான் முதல்வன்’ திட்டம். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பான பல வழிகாட்டுதல்களை வழங்க ‘நான் முதல்வன்’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. வேலை கிடைக்கவில்லை என்று எந்த இளைஞரும் கூறக்கூடாது. வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று எந்த நிறுவனமும் கூறக்கூடாது. இதற்கான திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அனைத்து பல்கலைக்கழங்களும் இது போன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

தமிழக இளைஞர்களுக்கு அனைத்து நலன்களையும் தமிழக அரசு செய்துகொண்டிருக்கிறது. வசதி படைத்தவர்கள் தனியார் மையங்கள் மூலம் பயிற்சி எடுத்துச் செல்கின்றனர். மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. நிதி பற்றாக்குறை இருந்தாலும் மாணவிகளின் நலன் கருதி தொடர்ந்து நிதி வழங்கப்படுகிறது. மாணவர்களின் திறமை மற்றும் தகுதிக்கேற்ப சிறப்பான எதிர்காலம் அமையும். அதற்கேற்ப படிப்பும் இறுதி வரை தொடர வேண்டும்.

தற்போதைய சூழலில், வேலைக்கு தகுந்தாற்போல் இளைஞர்கள் கிடைக்கவில்லை என்று பல நிறுவனங்கள் கூறுகின்றன. வேலைக்கு ஏற்ற தகுதி களை இளைஞர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்களின் அடுத்தக்கட்ட உயர்வுக்கு பட்டம் ஓர் அடித்தளம். வேலை கிடைக்கவில்லை என்று எந்த இளைஞர்களும் குற்றம் சுமத்தாத நிலையை தமிழகம் எட்ட வேண்டும்.  இளைஞர்களுக்கான அனைத்து தகுதிகளையும் உருவாக்கும் கடமையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது.

நிதி பற்றாக்குறை இருந்த போதும் மாணவர்களின் நலன் கருதி பல திட்டங்கள் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இது மாணவர்களுக்கான அரசு. சென்னை பல்கலைக்கழகத்தில் திருநங்கைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும் என்ற திட்டம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அளிக்கும் சிறந்த சொத்து கல்விதான்.

காமராஜர் ஆட்சிக் காலம் பள்ளிக் கல்வித் துறையின் பொற்காலம், கலைஞர் ஆட்சிக் காலம் கல்லூரிகளின் பொற்காலம் என்பதைப் போல, எனது தலைமையிலான ஆட்சிக்காலம் உயர்கல்வித் துறையின் பொற்காலமாக மாற வேண்டும் என திட்டமிட்டு செயல்பட்டுக் கொண்டிருக் கிறோம். இத்தகைய முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் ஆளுநருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

More articles

Latest article