சென்னை:

தமிழகத்தில் நிலவும் வேலை இல்லா திண்டாட்டம் காரணமாக, பட்டம் படித்தவர்களும் கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள கட்டுரையின் விவரம்:

மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துவிட்டு திருநெல்வேலியில் இருந்து வந்த ராஜேஸ் என்ற இளைஞர், சென்னை தி.நகரில் ஓட்டல் ஒன்றில் சர்வராக வேலை பார்த்து வருகிறார்.

பெரிய நிறுவனங்களை ஒப்பிடும் போது, ஓட்டலில் தனக்கு 3 வேளை உணவும் போதுமான சம்பளமும் கிடைக்கிறது என்கிறார்.

இன்றைக்கு தமிழகத்தில் படித்த பலருக்கும் வேலை கிடைக்கவில்லை என்பதற்கு ராஜேஸே உதாரணம்.
தமிழகத்தில் 18 முதல் 29 வயது வரையிலான வேலை இல்லாதோர் விகிதம் 6.2 சதவீதமாக உள்ளது.
பஞ்சாபில் 5.8 சதவீதமும்,ஆந்திராவில் 5.7 சதவீதமும், மேற்கு வங்கத்தில் 5.4 சதவீதமும், ஹரியானாவில் 4.3 சதவீதமும், தெலங்கானாவில் 3.3 சதவீதமும், டெல்லியில் 2.7 சதவீதமும்,மகாராஷ்ட்ராவில் 2.6 சதவீதமும், கர்நாடகாவில் 1.9 சதவீதமும், குஜராத்தில் 1 சதவீதமும் படித்து வேலை இல்லாமல் இருப்பவர்கள் என்று 2015-16 ம் ஆண்டு எடுக்கப்பட்ட மத்திய தொழிலாளர் நலத்துறையின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இதில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பொருளாதார வளர்ச்சி குறைந்தது வேலை இல்லாத திண்டாட்டத்துக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

வேலை வாய்ப்பு எண்ணிக்கையைவிட, தகுதிபெற்ற பட்டதாரிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. உற்பத்தி நிறுவனங்கள் விரிபடுத்தப்படாததே இதற்கு காரணம்.உற்பத்தி நிறுவனங்கள் மூலம் புதிய முதலீடும் வரவில்லை.

சமீபத்தில் தமிழக சட்டப்பேரவை செயலகத்துக்கு 14 சுகாதாரத் தொழிலாளர்கள் பணியிடங்களுக்கு 4,600 விண்ணப்பங்கள் வந்திருந்தன. இதில் என்ஜினியர்கள்,முதுநிலை பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோ படித்தவர்கள் அடங்குவர்.

வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு, வேலைக்காக 1 கோடிக்கும் மேற்பட்டோர் காத்திருக்கின்றனர்.

சமீபத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் போராட்டத்தின்போது, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு முற்பட்டபோது, முதல் நாளிலேயே 3 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அது நிரந்தர வேலை இல்லை என்று தெரிந்தும் இவ்வளவு பேர் விண்ணப்பித்தனர். இதுவே, தமிழகத்தில் எந்த அளவுக்கு வேலை இல்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது என்பதை பிரதிபலிக்கிறது.

இது குறித்து தொழிலாளர் பொருளாதார நிபுணர் விஜயபாஸ்கர் கூறும்போது, தற்காலிக பணிகளில் ஏராளமான பட்டதாரிகளும், என்ஜினியர்களும் சேர்வது அதிகரித்து வருகிறது. தொழில்சார்ந்த மாநிலமாக தமிழகம் இருந்தாலும், கடந்த சில ஆண்டுகளைவிட தற்போது குறைந்த தொழிலாளர்களை வைத்தே வேலை வாங்குகின்றனர்.

குறைந்த அளவிலான ஊழியர்களைக் கொண்ட தனியார் நிறுவனங்களில் படித்தவர்கள் அதிகமாக பணியாற்றுகின்றனர் என்றார்.

கடந்த 2016-ல் தமிழகத்தில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டில் 4.7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பும் என அறிவிக்கப்பட்டது.
இந்த ஆண்டு நடந்த முதலீட்டாளர் மாநாட்டில், ரூ.3 லட்சம் கோடி முதலீடு செய்ய நிறுவனங்கள் உறுதியளித்திருப்பது இளைஞர்களுக்கு நம்பிக்கையை அளித்துள்ளது.