சென்னை: நிர்பயா திட்ட நிதியின் கீழ், சென்னை மாநகராட்சி சார்பில், 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை வாகனம் அறிமுகப் படுத்தப்பட்டு உள்ளது. இதை  மேயர் பிரியா முன்னிலையில், அமைச்சர் நேரு தொடங்கி வைத்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்வதற்காக தூய்மை இந்தியா திட்ட சேமிப்பு நிதியின் கீழ், ரூ.30.28 கோடி மதிப்பீட்டில் 74 காம்பாக்டர் வாகனங்கள் மற்றும் நிர்பயா திட்ட நிதியின் கீழ், ரூ.4.37 கோடி மதிப்பீட்டில் 15 நடமாடும் மகளிர் ஒப்பனை அறை, வாகனங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டினை மாண்புமிகு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் நேரு இன்று ரிப்பன் கட்டட வளாகத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கான நடமாடும் ஒப்பனை அறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கழிவறை தேடி பெண்கள் சந்திக்கும் சிரமத்தை தவிர்க்கும் நோக்கில் பயன்பாட்டுக்கு வருகிறது. சென்னையில் போதுமான அளவிற்கு பொது கழிவறைகளை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டு ஒப்பனை அறை கழிவறைகளை அமைத்து வருகிறது. அதே நேரத்தில் பல கழிவறைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் பெண்களுக்கான நடமாடும் ஒப்பனை அறை அறிமுகம் செய்யப்படுகிறது. ஒரு மண்டலத்துக்கு தலா ஒன்று என மொத்தம் 15 நடமாடும் ஒப்பனை அறை பயன்பாட்டுக்கு வருகிறது. ஒரு நடமாடும் ஒப்பனை அறை மதிப்பு ரூ.29.13 லட்சம்; மொத்த மதிப்பு ரூ.4.37 கோடி ஆகும். ஒப்பனை அறையில் சானிட்டரி நாப்கின், உடை மாற்றும் சிறு அறை. தாய்ப்பால் ஊட்டும் அறைகள் உள்ளன.

இந்த தொடக்க விழா நிகழ்ச்சியில், அமைச்சர் நேருவுடன் மேயர் பிரியா, துணை மேயர் மகேஸ்குமார், கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர் நா.கார்த்திகேயன் மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர், கூடுதல்/இணை/துணை ஆணையாளர்கள், நிலைக்குழுத் தலைவர்கள்,
மண்டலக்குழுத் தலைவர்கள் மற்றும் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.