சென்னை: பாஜகவுடனான உறவு முறிந்துவிட்டதாக அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் போன்றோர் கடுமையாக விமர்சனம் செய்த நிலையில்,  லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்தோ, பாஜக பற்றியோ பேசக்கூடாது என அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

பாஜக உடன் கூட்டணி முறிந்து விட்டதாக ஜெயக்குமார் கூறியுள்ள நிலையில் பொதுவெளியில் எதைப்பற்றியும் பேச வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில், அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக உடனான தொகுதி பங்கீடு இழுபறியான தால் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டது பாஜக. அந்த தேர்தலில் மாநகராட்சி வார்டுகள், நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் என மொத்தம் 308 இடங்களில் வென்றது பாஜக. அதே நேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டது . இருந்தாலும் அவ்வப்போது இரு கட்சிகளுக்கு இடையே உரல் நீடித்து வருகிறது.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. ஆனால் பெருந்தோல்வியை சந்தித்தது. 40 தொகுதிகளில் தேனி தொகுதியை தவிர மீதம் உள்ள 39 தொகுதியையும் திமுக – காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இதனால் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால்தான் தோல்வி என அதிமுக விமர்சனம் செய்தது. இருந்தாலும்,  2021 சட்டமன்ற தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்தது.

2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த 20 இடங்களில் கோவை தெற்கு, மொடக்குறிச்சி, நாகர்கோவில், நெல்லை ஆகிய 4 தொகுதிகளை கைப்பற்றி, 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டசபைக்குள் நுழைந்தது. அதிமுக எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. இருந்தாலம் இரு கட்சிகளுக்கு இடையே யார் பெரிய கட்சி என போட்டி நிலவி வருகிறது. தேசிய கட்சியான பாஜக, தமிழ்நாட்டில் தற்போதுதான் காலூன்றி வருவதால், அதிமுக அவை அவ்வப்போது சீண்டி வருகிறது.

அதன் எதிரொலியாக, கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதமே பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறும்போது,  தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, அதனால்,  அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று  கூறியிருந்தார்.  ஆனால், திடீரென 2023  மார்ச் மாதம் பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல்குமார்  அதிமுகவில் இணைந்தது சலசலப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, நிர்மல்குமார் தலைமையில் ஏராளமான பாஜகவினர் அதிமுகவில் இணைந்தனர். அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்த பல்வேறு நிர்வாகிகள் இணைந்தனர். இதனால்,  பாஜக தலைமைக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சில இடங்களில் பாஜகவினர்   எடப்பாடி பழனிச்சாமியின் உருவப்படத்தை எரித்து சர்ச்சையை ஏற்படுத்தினர். இதையடுத்து மோதல் போக்கு நீடித்து வந்தாலும்,  கூட்டணி நீடிப்பதாகவே  இரு தரப்பினரும் கூறி வந்தனர்.

இந்த நிலையில்தான்  உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இதையடுத்து, எடப்பாடி பழனிச்சாமியும். பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்வதாக அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில்தான் பேரறிஞர் அண்ணா குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்தால் அதிமுக- பாஜக இடையே மோதல் நீடித்தது. இந்த மோதலின் தொடர்ச்சியாக இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்து இல்லை, இது கட்சியின் ஒட்டுமொத்த முடிவு. இனி அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சித்தால், கடுமையான எதிர்ப்பை சம்பாதிப்பார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதனையடுத்து நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பாஜக பற்றியும் அண்ணாமலை பற்றியும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பொள்ளாட்சி ஜெயராமன், எஸ்.பி வேலுமணி, ஆர்.பி உதயகுமார் ஆகியோர் தேர்தல் கூட்டணி பற்றி பேசினர். ஆனால் தமிழக பாஜக நிர்வாகிகள் யாரும் தேர்தல் கூட்டணி பற்றி பேசவோ, விமர்சனம் செய்யவோ வேண்டாம் என டெல்லி தலைமை அறிவுறுத்தியது.

இந்த நேரத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையோ கூட்டணி சிறப்பாக இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமியுடன் தான் பேசிக்கொண்டிருப்ப தாகவும் கூறினார் அண்ணாமலை.

இதுதொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் கூட்டணி பற்றியோ, பாஜக பற்றியோ பொதுவெளியில் பேசவோ விமர்சனம் செய்யவோ வேண்டாம் என நிர்வாகிகளுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

லோக்சபா நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இது பற்றி பொதுவெளியில் பேசி மேலும் சிக்கலை உருவாக்க வேண்டாம் என  அறிவுறுத்தி உள்ளார்.