ஜெ.வை பார்கக முடியவில்லை: ஆட்கொணர்வு மனு போடுவேன்….! சசிகலா புஷ்பா!

Must read

சென்னை:
திமுகவிலிருந்து நீக்கப்பட்ட ‘திருச்சி சிவா’ புகழ் சசிகலாபுஷ்பா வார இதழ் ஒன்றுக்கு அதிரடி பேட்டி அளித்துள்ளார். அதில் முதல்வரை பார்க்க ஆட்கொணர்வு மனு போடப்போகிறேன் என பரபரப்பை கொளுத்தி போட்டுள்ளார்.
கடந்த வாரம் வியாழக்கிழமை  இரவு உடல்நிலை சரியில்லாமல்  அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் முதல்வர் ஜெயலலிதா. இரண்டு நாட்களில் விடுதலை ஆவார் என்று முதலில் தெரிவித்த அப்பல்லோ நிர்வாகம், பின்னர் முதல்வர் சரியாகிவிட்டார்… ஆனால் ஒரு சில நாட்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று கூறி ஒரு வாரத்திற்கும் மேலாக முதல்வரை மருத்துவமனையிலேயே வைத்திருக்கிறது.
இதன் காரணமாக பொதுமக்களிடையே முதல்வர் உடல் நிலை குறித்து அதிருப்தி நிலவி வருகிறது.  அவரது உடல்நிலை குறித்து அவ்வப்போது விஷமிகளால் வதந்தி பரப்பப்படுகிறது.  கருணாநிதி, ராமதாஸ் போன்ற அரசியல் கட்சி தலைவர்களும் இது குறித்து முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது சிகிச்சை பெறும் படத்தையாவது வெளியிட வேண்டும் என வற்புறுத்தி வருகின்றனர்.
sasi
இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவரும், திருச்சி சிவாவின் தோழியுமான சசிகலாபுஷ்பா வார இதழ் ஒன்றுக்கு  பரபரப்பு  பேட்டி கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:
மருத்துவமனையில் முதல்வர் அனுமதிக்கப்பட்டு பல நாட்கள் ஆகியும் அவர் முகத்தைக் காட்டவில்லை. அவர் குரலைக் கேட்க முடிய வில்லை. அவர் பூரண குணமடைய வேண்டும் என்று எதிர்க்கட்சி முதற்கொண்டு அனைத்துக் கட்சியினரும் வேண்டி யுள்ளனர். முதலமைச்சர் நலமாக இருக்கிறார் என்றால், அவரைக் காட்ட வேண்டும். இல்லை என்றால், நான் நன்றாகத்தான் இருக்கிறேன். தமிழக மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று வாட்ஸ் அப் மூலம் முதலமைச்சரே பேசி வெளியிடலாம்.
“காவிரிப் பிரச்னையில் தலைமைச்செயலாளருடன் விவாதித்தார், அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். ஒரு சில அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்” என்றெல்லாம் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. ஆனால், அப்படி ஆலோசனை நடந்தது என்பதற்குச் சாட்சியாக ஒரு போட்டோகூட இதுவரை வெளியிடவில்லை.
இத்தனை நாட்கள் ஆகியும் முதலைமைச்சர் நிலை ரகசியமாகவே வைக்கப்பட்டு உள்ளது. எனவேதான், தொண்டர்களும் மக்களும் கவலைப்படுகிறார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அவரை டி.வி-யில் காண்பித்தார்கள். அவர் பேசினார். எங்கே இருந்தாலும் தலைவர் நலமாக இருக்கிறார் என்று மக்கள் நம்பினார்கள்.  ஆனால், இன்று லட்சக்கணக்கானோர் முதலமைச்சர் உடல்நிலை பற்றிய முரணான தகவல்களால் வேதனையில் உள்ளனர்.
லட்சக்கணக்கான தொண்டர்களுக்காக, அவர்களின் நிம்மதிக்காக வாட்ஸ் அப்பில் அரை நிமிடம் பேசி, அவரது குரலைத் தொண்டர்கள் கேட்டால் நிம்மதி அடைவார்கள். ஏன் அவர்கள் அதைச் செய்யவில்லை என்றுதான் தெரியவில்லை.
உண்மையிலேயே முதலமைச்சர் மீது அனுதாபம் உடைய தொண்டர்கள் இதற்காக வழக்குத் தொடுக்கலாம். எதற்கு முதலமைச்சரை வெளியே காட்டவில்லை? தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது? என்று கோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யலாம்.
தமிழ்நாட்டின் முதலமைச்சரை இத்தனை நாட்களாகப் பார்க்க முடியவில்லை. அவர் யாருடைய பிடியின் கீழ் இருக்கிறார்? முதலமைச்சருக்குப் பிடித்த எத்தனையோ தலைவர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம், முதலமைச்சர் முன்பு செல்லக்கூட அனுமதிக்கப்படவில்லை? ஏன் உள்ளே செல்ல அனுமதிக்கக் கூடாது?
முதல்வரை  ஒரு சிலரது கஸ்டடியில் வைத்துக் கவனித்துக்கொள்கிறார்கள். முதலமைச்சரை என்ன செய்யப் போகிறார்கள்? முதலமைச்சர் என்ன நிலையில் இருக்கிறார்? இது தொண்டர்களுக்கு உள்ள வருத்தம், கவலையாகும்.  இப்போது கொடுக்கப்படும் மருத்துவம் ஏன் இப்படி ஒளித்து வைக்கப்படுகிறது? என்ன நடக்கிறது? அந்த பயம் பொதுமக்கள் மத்தியிலும் தொண்டர்கள் மத்தியிலும் இருக்கிறது.
முதலமைச்சருடன் அவரது தோழி இருப்பதாகத்தான் சொல்கிறார்கள். அவர் விருப்பத்துடன்தான் வைத்துக் கொள்ளப்படுகிறாரா அல்லது கட்டாயப்படுத்தி அவரது கண்காணிப்பில் இருக்கிறாரா? என்பது என் கேள்வி.
கட்டாயத்தின் பேரில் அவரது பிடியில் வேறுவழியில்லாமல் முதல்வர் இருக்கிறார் என்றால், அதை என்னால் மட்டும் அல்ல, தமிழ்நாட்டு மக்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இவை எல்லாம் தமிழகத்தில் ஒரு பயத்தை ஏற்படுத்தி உள்ளன. ஒரு குடும்பத்தின் பிடியில் உள்ளார் என்ற அச்சம் அனைவருக்கும் ஏற்பட்டு உள்ளது என்று கூறியுள்ளார் சசிகலா புஷ்பா.
முதலமைச்சர் தமிழக மக்களுக்குப் பொதுவானவர். அவருக்கு என்ன நோய் என்பதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இதை மருத்துவமனை நிர்வாகம் புரிந்துகொள்ள வேண்டும். மருத்துவமனை நிர்வாகம் எதையோ மூடிமறைக்கிறது என்ற சந்தேகம் பொதுமக்களுக்கும், முதல்வர் நலனில் அக்கறை உள்ளவர்களுக்கும் ஏற்பட்டுள்ளது.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால், நான் பிரதமரைச் சந்தித்து “தமிழக முதல்வர் எங்கே இருக்கிறார்? நீங்கள் கொண்டுவந்து தாருங்கள்” என்று மனுக் கொடுக்க உள்ளேன்.
உள்துறை அமைச்சரையும் சந்தித்து மனுக் கொடுப்பேன். குடியரசுத் தலைவரையும் சந்திப்பேன் என்று கூறும் சசிகலா புஷ்பா, தேவைப்பட்டால், முதல்வரைக் கண்டறிய வேண்டி ஒரு ஆட்கொணர்வு மனுவை அவரே தாக்கல் செய்ய போவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article