சென்னை

மிழக அரசு அனுமதித்துள்ள பயோடிகிரேடபிள் பிளாஸ்டிக் பைகளும் இயற்கையாக மக்காது என ஐநா சுற்றுச்சூழல் மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஆண்டு ஜனவரி 1 முதல் தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட 14 பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.  இந்த தடையில் இருந்து பயோடிகிரேடபிள் பிளாஸ்டிக் பைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.   இந்த பிளாஸ்டிக் பைகள் எளிதில் மக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வகை பிளாஸ்டிக் பைகளில் போலிகள் வருகின்றன.  அதை எளிதில் கண்டுபிடிக்க முடிவதில்லை.  இந்த பிளாஸ்டிக் குறித்து ஐநா சுற்றுச் சூழல் மையம் ஆய்வு நடத்தி, வெளியிட்ட அறிக்கையில், “பெரும்பாலான அரசுகள் பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுவை குறைக்கும் விதமாக வழக்கமாகப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்குத் தடை விதித்து, பயோடீகிரேடபிள் பைகளை பயன்படுத்த அனுமதிக்கின்றன.

பிளாஸ்டிக், குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் பைகள் மற்றும் கிண்ணங்கள் ஆகியவை, உயர் வெப்பநிலையில் 50 டிகிரி செல்சியஸூக்கு மேல் நீண்ட காலத்துக்கு இருந்தால் மட்டுமே முழுமையாகச் சிதைவடையும். இதுபோன்ற வெப்ப சூழல், கழிவுகளை எரிக்கும் உலைகளில் மட்டுமே இருக்கும்.

எனவே, மக்காச்சோள மாவு, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு மற்றும் சர்க்கரை அல்லது கொழுப்பு வகைகளைப் பாக்டீரியாவால் நொதிக்க செய்து தயாரிக்கப்படும் பயோடீகிரேடபிள் நெகிழி, சூரிய ஒளி, காற்று, நீர் மூலமாகவோ, கடலிலோ தானாகச் சிதைவடையாது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், “இந்த வகை பிளாஸ்டிக்குகளை மத்திய மாசுக்கட்டுப்பாடு வாரிய அறிவுறுத்தலின் பேரில் அனுமதித்துள்ளோம்.  இது குறித்த ஐநா சுற்றுச்சூழல் மைய அறிக்கை பற்றி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உள்ளிட்ட அனைத்து அமைப்புகளிடமும் தெரிவித்து அவர்கள் விளக்கத்தைப் பெற்ற பின் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனக் கூறி உள்ளனர்.