உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோவிலூர்

Must read

லகளந்த பெருமாள் கோவில், திருக்கோவிலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூரில் கோவில் கொண்டுள்ள உலகளந்த பெருமாள் கோவில் (திரிவிக்ரம பெருமாள்) ஶ்ரீசக்கர விமானத்தின் கீழ் அடியார்களுக்கு சேவை சாதிக்கிறார். 108 வைணவ திவ்ய தேசங்களில் தொண்டை நாட்டைச் சேர்ந்த 43வது திவ்ய தேசமாகும். இத்தலத்தை நடுநாட்டு திருப்பதி என்று கூறுகின்றனர்.

அசுர குலத்தில் பிறந்திருந்தாலும், நாடு போற்றும் நல்லாட்சியை புரிந்த மகாபலி சக்ரவர்த்தி தனது முன்பிறவியில் எலியாக இருந்தான். அப்போது சிவன் கோவில் ஒன்றில் அணையும் நிலையில் இருந்த ஒரு விளக்கை அங்கு வந்த ஒரு எலியின் மூக்கு நுனியால் விளக்கு திரி தூண்டப்பட்டு, விளக்கு பிரகாசமாக எரியத் தொடங்கியது. தன்னையும் அறியாமல் நற்காரியம் செய்த அந்த எலியை, மறு பிறவியில் நாடு போற்றும் சக்ரவர்த்தியாக பிறக்க அருள்புரிந்தார் சிவபெருமான்.

அவனே மகாபலி சக்ரவர்த்தியாக அடுத்த பிறவியில் பிறந்தான். அவன் தன் நாட்டு மக்களுக்கு செய்த நற்காரியங்கள், அவனை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றது. இந்த நிலையில் நாட்டின் நலனுக்காக வேள்வி ஒன்றை நடத்த முன்வந்தான் மகாபலி. இதை அறிந்த தேவர்கள் பல நற்காரியங்கள் செய்திருக்கும் நிலையில், இந்த வேள்வியையும் மகாபலி செய்து முடித்து விட்டால், அசுரகுலத்தைச் சேர்ந்த அவன் இந்திரப்பதவியை அடைந்துவிடக்கூடும் என்று எண்ணினர்.

அதனைத் தடுத்தருளும்படி மகா விஷ்ணுவிடம் போய் நின்றனர். அவனால் தேவர்களான எங்களுக்கு பெரும் ஆபத்து வரலாம். எனவே அவனது வேள்வியை தடுத்து நிறுத்த வேண்டும்’ என்று வேண்டினர். இந்த தேவர்களுக்குத்தான் எத்தனை பொறாமை. அவனால் இவர்களுக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்று என்னிடமே வந்து உதவிக்கு நிற்கிறார்களே என்று எண்ணிக் கொண்டார் மகாவிஷ்ணு.

இருப்பினும் தேவர்களை காப்பது தனது கடமை என்பதால் அவர்களுக்கு உதவ முன்வந்தார். அதே சமயம் மகாபலியின் சிறப்பையும் உலகம் அறியச் செய்ய அவர் சித்தம் கொண்டார். அதற்காக வாமன அவதாரம் (குள்ளமான) எடுத்தார் மகாவிஷ்ணு. மூன்று அடி உயரமே கொண்ட அவர், மகாபலி நடத்தும் வேள்வி சாலைக்குச் சென்றார். அவரை வரவேற்ற மகாபலி, தானம் வழங்க முற்பட்டான்.

ஆனால் வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை அறிந்த அசுர குல குரு சுக்ராச்சாரியார் மகாபலியிடம், “வந்திருக்கும் அந்தணரின் மேல் எனக்கு சந்தேகமாக உள்ளது. அவர் திருமாலின் அவதாரமாக இருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. எனவே தானம் கொடுப்பதில் அவசரம் வேண்டாம்” என்று அறிவுறுத்தினார்.

மகிழ்ச்சியில் திளைத்தான் மகாபலி. “குருவே! என்னிடம் தானம் பெற வந்திருப்பது திருமாலின் அவதாரம் என்றால், இதைவிட பெரிய பேறு என்ன எனக்கு இருக்கப் போகிறது?” என்று கூறியதுடன் நில்லாமல், கமண்டலத்தை எடுத்து நீரை வார்த்து தானத்தைக் கொடுக்க முன்வந்தான்.

இனி அவனைத் தடுக்க முடியாது என்பதை அறிந்த சுக்ராச்சாரியார், தும்பியின் (வண்டு) உருவம் கொண்டு கமண்டலத்திற்குள் புகுந்து நீர் வரும் வழியை அடைத்துக்கொண்டார். இதை பார்த்த வாமனர், தர்ப்பைப் புல் ஒன்றை எடுத்து நீரை அடைத்திருந்த வண்டை நோக்கி குத்தினார். இதில் சுக்ராச்சாரியாரின் கண் பார்வை பறி போனது.

மகாபலி சக்ரவர்த்தி நீர் வார்த்து தானத்தை கொடுத்தான். பின்னர் தங்களுக்கு உரிய நிலத்தை அளந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று வாமனரை நோக்கி கூறினான். இதற்காகவே காத்திருந்த வாமனர், குள்ள உருவில் இருந்து வானுயரத்திற்கு உயர்ந்தார். இதைப் பார்த்து ஆச்சரியத்தில் மலைத்துப் போய் நின்றான் மகாபலி சக்ரவர்த்தி. உயர்ந்து நின்ற வாமனர் “முதல் அடியைக் கொண்டு மண்ணுலகையும், இரண்டாம் அடியாக விண்ணுலகையும் அளந்து முடித்தார்”. பின்னர் மகாபலியிடம், “சக்ரவர்த்தியே! நான் இரு உலகங்களையும் இரண்டு அடியில் அளந்து விட்டேன். மூன்றாவது அடியை எங்கே வைப்பது” என்று கேட்டார். ‘இறைவா! மூன்றாவது அடியை என் தலை மீது வையுங்கள்’ என்று நிலத்தில் மண்டியிட்டு அமர்ந்து சிரம் தாழ்த்தி இருந்தான்.

மகாவிஷ்ணுவும் தனது மூன்றாவது அடியை மகாபலியின் தலைமீது வைத்து அவனை பாதாள உலகத்திற்கு தள்ளினார், தொடர்ந்து ‘மகாபலியே! உன் நல்லாட்சியால் உன் நாட்டை வளம் பெறச் செய்தாய். அதனால் நீ பெற்ற பலன்கள் அனைத்தும் உனக்கு உயர்வைத் தந்தது. இப்போது நீ எனக்கு வழங்கிய தானத்தினால், இந்த உலகமே போற்றும் அளவுக்கு சிறப்புற்று இருப்பாய்’ என்று அருளினார்.

அவ்வரலாற்றின்படி மாலவன் கால் தூக்கி நிற்கும் காட்சியே இக்கோவில் கருவறையில் மூலவராக வடிக்கப்பெற்றிருக்கிறது.

மூலவரின் திருமேனி தாருவால் (மரம்) ஆனது. இவ்வளவு பெரிய பெருமாள் திருமேனியை வேறு எந்த ஊரிலும் காணமுடியாது. சாளகிரமத்தால் ஆன கிருஷ்ணர் தனி சன்னதியில் உள்ளார்.

நல்ல பதவிகளை அடைய விரும்புவர்களும், பதவி உயர்வு வேண்டுபவர்களும், பதவி இழந்தவர்களும் இங்கு வந்து பிரார்த்தனை செய்து வழிபட்டால் அவர்களது வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பதே இக்கோவிலின் தனிச் சிறப்பு. கல்யாண பாக்கியம், குழந்தை வரம் ஆகியவை நிறைவேறுகின்றன. இங்குள்ள சக்கரத்தாழ்வார் விஷ்ணு சொரூபமாக இருப்பதால் சத்ருக்கள் (எதிரிகள்) தொல்லை நீங்கும்.

More articles

Latest article