டெல்லி: இந்தியாவின் சமையல் எண்ணை தேவையை பூர்த்தி செய்யும், உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்தால், இந்தியாவில்  சமையல் எண்ணை விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது. இது சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தில் மேலும் சிக்கலை ஏற்படுத்தும் என்பதால், இல்லத்தரசிகள் அச்சமடைந்து உள்ளனர்.

உக்ரைன் போர் எதிரொலியாக உலக அளவில்  கச்சா எண்ணை விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பங்கு சந்தைகளும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.  இது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. சமையல் எண்ணை உற்பத்தில், உக்ரைன் உலகிலேயே அதிகபட்சமாக 70 சதவிகித பங்கு வகிக்கிறது. இதை யடுத்து ரஷியா 20 சதவிகிதம் அளவில் ஏற்றுமதி செய்து வருகிறது.

இந்தியாவில், ஆண்டுக்கு சுமார் 2.5 மில்லியன் டன்கள் (மெட்ரிக்) சூரியகாந்தி எண்ணெயைப் பயன்படுத்துகிறது. இதில் அதிகமாக நுகரப்படுவது சமையல் எண்ணெய் ஆகும். இந்திய அரசின் தரவுகளின்படி, நாட்டின் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 2019-20 இல் (ஏப்ரல்-மார்ச்) மொத்தம் 2.5 மில்லியன் டன் மற்றும் 2020-21 இல் 2.2 மில்லியன் டன், முறையே 1.89 பில்லியன் டாலர் மற்றும் 1.96 பில்லியன் டாலர் மதிப்புடையதாகும்.

மொத்த இறக்குமதியில், உக்ரைன் 2019-20 இல் 1.93 மில்லியன் டன் (மதிப்பு $1.47 பில்லியன்) மற்றும் 2020-21 இல் 1.74 மில்லியன் டன் ($1.6 பில்லியன்) என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மற்றும் ரஷ்யாவில் உள்ள கருங்கடல் துறைமுகங்களில் இருந்து ஒவ்வொரு மாதமும் சுமார் 200,000 டன்களை இறக்குமதி செய்து வருகிறது.

இந்தியா பெருமளவில்  சூரியகாந்தி எண்ணெய்யை உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்து வந்த நிலையில், தற்போது இறக்குமதி பாதிக்கப்பட்டு  இருப்பதால், விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை இந்தியாவின்  60சதவிகித கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி உக்ரைனில் இருந்தே செய்யப்பட்டுள்ளது.  ஆனால், தற்போ ரஷியா உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதுடன், உக்ரைன் வான்வெளி மற்றும் துறைமுகங்களை சுற்றி வளைத்து, தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இதனால் இந்தியாவில் சமையல் எண்ணை விலை உயர்த்தொடங்கி உள்ளது.

நமது நாட்டில் கடந்த ஜனவரி மாத நிலவரப்படி, மும்பையில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சூரியகாந்தி எண்ணெயின் விலை $1,400 ஆக இருந்தது. அதே கடந்த  பிப்ரவரி 23ந்தேதி நிலவரப்படி, மும்பையில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா சூரியகாந்தி எண்ணெயின் விலை (செலவு மற்றும் காப்பீடு மற்றும் சரக்கு) ஒரு டன்னுக்கு $1,630 ஆக  உயர்ந்துள்ளது. மேலும்,  இறக்குமதி செய்யப்பட்ட கச்சா பாமாயில் மற்றும் டி-கம்மிட் சோயாபீன் எண்ணெய் ஆகியவை முறையே டன் ஒன்றுக்கு $1,810 மற்றும் $1,777 உயர்ந்துள்ளது.

பொதுவாக, இறக்குமதி செய்யும் கச்சா சூரியகாந்தி எண்ணெய் மூலம், சுத்திகரிப்பு நிறுவனம் 40 முதல் 45 நாட்களுக்கு விற்பனைக்குத் தேவையான இருப்பை வைத்திருக்கும். இதனால்  மார்ச் மாதம் வரை இந்தியாவில் சமையல் எண்ணை தேவை போதுமானதாக இருந்தாலும், வணிக நிறுவனங்கள் விலை உயர்த்தியே விற்பனை செய்யும் வாய்ப்பு உள்ளது.

ஆனால், உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்தால்,  அடுத்த சில வாரங்களுக்கு இந்தியாவில்  சமையல் எண்ணை இருப்பது கேள்விக்குறியாக மாறி விடும். ரஷ்யா, உக்ரைனில் ஏற்றுமதி பாதிக்கப்படும் சூழல்களைப் பொருத்து இந்தியாவின் கச்சா சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி பாதிக்கப்பட்டுள்ளதால், இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் சமையல் எண்ணை போதுமானதாக இருக்காது.  இதனால், விலை உச்சத்திற்கு செல்லும் வாய்ப்பு உள்ளது. இதன் தாக்கம் இல்லத்தரசிகளின் தலையில் விழம் சூழல் உருவாகி உள்ளது.

மேலும், கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கம், நிதி மற்றும் வெளி அபாயங்களை ஏற்படுத்தும் என்றும்,  கச்சா எண்ணெய் 10% அதிகரிப்பு WPI (Wholesale Price Index) பணவீக்கத்தில் 0.9%-த்தை அதிகரிக்கும். இறக்குமதிக்கு பெரிய அளவில் ஒதுக்கப்படும் நிதியால் இந்தியாவின் வெளிப்புற நிலையும் பாதிப்படையும் என்று பொருளாதார வல்லுநர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஆனாலும், இந்தியாவின் பொருளாதார அடிப்படை மிகவும் வலுவாக இருக்கிறது என்றும், இந்திய பொருளாதாரத்தில் இது எந்த விதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது மத்தியஅரசு தெரிவித்து வருகிறது.

எதுவாக இருந்தாலும் பாதிக்கப்படப்போவது சாமானிய மக்களே….