சென்னை: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூலை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வெளியிட உள்ளார்.. இந்த நூல் வெளியீட்டு விழாவில் தேசிய கட்சிகளின் தலைவர்கள், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் உள்பட, தமிழ்நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ் உள்பட தமிழக அரசியல் கட்சிதலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் பிப்ரவரி 28-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டு நூலை வெளியிட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியாகாந்திக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. தொடர்ந்து ராகுல்காந்திக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. மேலும்,  பாஜக கூட்டணி கட்சிகளைத் தவிர்த்து, தேசிய கட்சித் தலைவர்களுக்கும் மற்றும் மாநிலத்தை தனித்து ஆளும் முதல்வர்களுக்கும் திமுக அழைப்பு விடுத்து வருகிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, ஆந்திரா, தெலுங்கானா, கேரள, புதுச்சேரி மாநில முதல்வர்களும், முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில்,  மு.க.ஸ்டாலின் நூல் வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்பட பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நூல் வெளியிட்டு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலினின் நூலை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு பதிலாக ராகுல்காந்தி நேரில் கலந்துகொண்டு நூலை வெளியிட்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

மேலும் விழாவுக்கு அமைச்சர் துரைமுருகன் தலைமையும், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு முன்னிலையும்,   திமுக எம்.பி.கனிமொழி வரவேற்புரையும் ஆற்றுகின்றனர்.

இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக, கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா உள்பட பலர் பங்கேற்கின்றனர்.

இறுதியில் விழா நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை ஆற்றுகிறார்.