போரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா தயாரா? என்று கேள்வியெழுப்பியுள்ள உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, அது குறித்து தனக்கு சந்தேகம் இருப்பதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்றது முதல் காலை, மாலை, இரவு என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருவதுடன் உலகில் உள்ள அனைத்து நாட்டு மக்களும் பொழுது விடிந்தால் டிரம்ப் குறித்த தேடலை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த வகையில், ரஷ்யா – உக்ரைன் இடையிலான போரை முடிவுக்கு கொண்டு வர பகீரத பிரயத்தனம் செய்து வரும் டிரம்ப் மற்ற நாடுகளைப் போல் ரஷ்யாவை சுலபமாக தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரமுடியாமல் திணறி வருகிறார்.
ரஷ்யா – உக்ரைன் போரால் வாரத்திற்கு, ராணுவ வீரர்கள் மட்டும் சுமார் 50,000 பேர், அதாவது நாளொன்றுக்கு சராசரியாக 7,000 ராணுவ வீரர்கள், கொல்லப்படுவதாக கூறும் டிரம்ப் இந்தப் போரை முற்றிலும் நிறுத்த தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
அதற்காக அந்த இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ள டிரம்ப் போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி வெளிப்படுத்தியுள்ள அதே அர்ப்பணிப்பு உணர்வை ரஷ்யாவிடம் இருந்து எதிர்பார்க்கிறார்.
இந்த நிலையில் போரை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷ்யா தயாராக இருக்கிறதா என்பதில் சந்தேகம் உள்ளதாக, துருக்கியில் நடைபெற்ற ரஷ்யாவுடனான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிற ஐரோப்பிய தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் உக்ரைன் அதிபர் கூறியுள்ளார்.
போர் நிறுத்தம் தொடர்பான அமெரிக்காவின் திட்டத்தை ஏற்று உக்ரைன் முன்நிபந்தனைகள் இல்லாமல் முழு போர்நிறுத்தத்தை கடைபிடிக்க விருப்பம் தெரிவித்துள்ளது என்று கூறிய ஜெலென்ஸ்கி, இந்த விவகாரத்தில் ரஷ்யா தனது உண்மையான அர்ப்பணிப்பை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
ரஷ்ய கொள்கை என்னவென்று எனக்குத் தெரியவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்புடனான எங்கள் உரையாடலில் இருந்து நான் புரிந்துகொண்டபடி, ரஷ்யா போர் நிறுத்தத்தை விட வேறு ஒன்றை விரும்புவதாக ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
அனைத்து கூட்டாளி நாடுகளும் போர் நிறுத்தத்தில் ஆர்வமாக உள்ளன என்று நான் நம்புகிறேன். போரினால் பல இழப்புகள் ஏற்பட்டன; நாங்கள் உண்மையில் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம்.
இருப்பினும், ரஷ்யா இதற்குத் தயாராக இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. நாங்கள் அவர்களை நம்புவதில்லை. போர் நிறுத்தம் ஏற்பட வேண்டுமென்றால், முதல் படி போரை நிறுத்துவதாக இருக்க வேண்டும் என்று அவர் கூறியதுடன் அதன் பின்னரே கைதிகள் பரிமாற்றம் உள்ளிட்ட பிற செயல்முறைகள் நடைபெறும் என்று கூறினார்.
இதற்காக, சர்வதேச கூட்டாளி நாடுகளுடனான தனது தொடர்ச்சியான தொடர்பை அவர் வலியுறுத்தினார், “இந்த விஷயத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் நான் தொடர்ந்து விவாதித்து வருகிறேன்” என்று கூறினார்.