வாஷிங்டன்

மெரிக்க முன்னாள் அதிபர் ஜோ பைடன் தீவிர புற்று நோயால் பாதிக்கப்பட்டதற்கு இந்நாள் அதிபர் டிரம்ப் துயரம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜோ பைடன் (வயது 82) கடந்த ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் முன்கூட்டியே போட்டியிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹாரிஸ், தற்போதைய அதிபர் டிரம்பிடம் தோல்வி அடைந்தார். 4 ஆண்டு பதவிக்காலத்திலேயே பைடனின் உடல் நலம் மற்றும் அவரது வயது மிகுந்த விவாதப் பொருளாக இருந்து வந்தது. இந்நிலையில், முன்னாள் அதிபர் பைடனுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பு இருப்பதை மருத்துவர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். கடந்த சில நாட்களாக சிறுநீரில் அறிகுறிகள் தென்பட்ட நிலையில், புற்றுநோய் இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. புற்றுநோய் செல்கள் எலும்புகளிலும் பரவியிருப்பதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர்.

புரோஸ்டேட் புற்றுநோய் பாதிப்பின் தீவிரத்தை மதிப்பிட க்ளீசன் மதிப்பெண் தரப்படும். இது 6 முதல் 10 வரை இருக்கும். 8க்கு மேலான மதிப்பெண்கள் தீவிரமான புற்றுநோயை குறிக்கின்றன. பைடனுக்கு 9 மதிப்பெண்கள் தரப்பட்டுள்ளது. இது புற்றுநோய் மிகவும் தீவிரமான கட்டத்தில் இருப்பதை குறிப்பதாக பைடனின் அலுவலகம் விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், புரோஸ்டேட் புற்றுநோய் குணப்படுத்த முடியாதது மட்டுமின்றி அறுவைசிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சைக்கு சாத்தியமற்றது. மருந்துகளால் மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும். புரோஸ்டேட் புற்றுநோயாளிகள் சிகிச்சையின் மூலம் 4 அல்லது 5 ஆண்டுகள் நோயுடன் வாழலாம் என மாசசூட்ஸ் ஜெனரல் பிரிகாம் புற்றுநோய் மையத்தின் டாக்டர் மேத்யூ ஸ்மித் கூறி உள்ளார்.

ஜோ பைடனின் அரசியல் எதிரியான அதிபர் டிரம்ப்,

‘‘இந்தச் செய்தியால் மிகவும் வருத்தமடைந்தேன். பைடன் விரைவாகவும் வெற்றிகரமாகவும் குணமடைய வாழ்த்துகிறேன்’’

என்று தெரிவித்துள்ளார்.