காசாவுக்குள் உதவிப் பொருட்களை எடுத்துச் செல்ல இஸ்ரேலின் தடை நீடித்தால் அடுத்த 48 மணி நேரத்தில் காசாவில் 14,000 குழந்தைகள் இறக்கக்கூடும் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் இன்று காலை பிபிசியிடம், உதவி சரியான நேரத்தில் சென்றடையவில்லை என்றால் 48 மணி நேரத்தில் காசாவில் 14,000 குழந்தைகள் இறக்கக்கூடும் என்று கூறினார்.

ஐந்து உதவி லாரிகள் திங்களன்று காசாவிற்குள் நுழைந்தன, ஆனால் பிளெட்சர் இதை “கடலில் ஒரு துளி” என்றும் மக்களின் தேவைகளுக்கு முற்றிலும் போதுமானதாக இல்லை என்றும் விவரித்தார்.

உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் நேற்று காசா பகுதியில் 2 மில்லியன் மக்கள் பட்டினியால் வாடுவதாகவும், இஸ்ரேலால் “எல்லையில் டன் கணக்கில் உணவு தடுக்கப்பட்டுள்ளது” என்றும் கூறியதைத் தொடர்ந்து பிளெட்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாலஸ்தீன இன அழிப்பில் ஈடுபட்டு வரும் இஸ்ரேல் மார்ச் 2 முதல் காசாவுக்கு உதவிப் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது இதனால் அந்தப் பகுதியில் ஐந்து பேரில் ஒருவர் பட்டினியை எதிர்கொள்வதாக ஐ.நா. ஆதரவு பெற்ற அறிக்கை சமீபத்தில் மதிப்பிட்டுள்ளது.

அதேவேளையில் திங்களன்று ஐ.நா. வெளியிட்ட ஒரு அறிக்கையில், “காசாவில் உள்ள அனைவரும் பசியில் உள்ளனர். உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், மக்கள்தொகையில் கிட்டத்தட்ட கால் பகுதியினர் பஞ்சத்தில் தள்ளப்படலாம். ஒரு பேரழிவைத் தடுக்க இப்போது காசாவிற்கு உணவு உதவி அனுமதிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தத்திற்குப் பிறகு, இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை “அடிப்படை அளவு” உணவு நுழைவை மீண்டும் தொடங்க முடிவு செய்தது.

இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடா தலைவர்கள் காசாவில் இஸ்ரேல் தொடர்ந்துவரும் “மிக மோசமான செயல்களை” நேற்று கண்டித்தனர், மேலும் இஸ்ரேல் இதனைத் தொடர்ந்தால் கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர்.

இதையடுத்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் கனடாவைத் தாக்கியதோடு டொனால்ட் டிரம்ப் வழியைப் பின்பற்றுமாறு இந்நாடுகளுக்கு அறிவுறுத்தினார்.

இருந்தபோதும் காசா மீதான தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் கடந்த வாரம் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான பாலஸ்தீன மக்களை கொன்று குவித்துள்ளது, காசாவில் இன்று குறைந்தது 44 பேரைக் கொன்றதாக காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் ஒரு மருந்து ஆய்வகத்தை குண்டுவீசித் தாக்கியதாக அல் ஜசீரா செய்தி வெளியிட்டுள்ளது.