இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் “நிரந்தர போர்நிறுத்தத்தை” ஏற்படுத்துவதில் சீனா ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என்று திங்களன்று சீனா தெரிவித்துள்ளது.

பாகிஸ்தானின் துணைப் பிரதமரும் வெளியுறவு அமைச்சருமான முகமது இஷாக் டார், சீன வெளியுறவுத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இன்று பெய்ஜிங் சென்றுள்ள நிலையில் சீனா இவ்வாறு அறிவித்துள்ளது.

‘ஆபரேஷன் சிந்துர்’ மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்த பிறகு, பாகிஸ்தானின் மூத்த அதிகாரி ஒருவர் சீனாவுக்குச் செல்வது இதுவே முதல் முறை.

சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்த இந்தியா எடுத்த முடிவு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து டார் தனது நட்பு நாடான சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“சீனாவும் பாகிஸ்தானும் நீண்ட கால நண்பர்கள்” “டாரின் வருகை, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளின் வளர்ச்சிக்கு பாகிஸ்தான் அரசாங்கம் அளிக்கும் முக்கியத்துவத்தை பிரதிபலிக்கிறது” என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் செய்தியாளர்களிடம் கூறினார்.

பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இரு நாடுகளுடனும் பேச்சுவார்த்தையில் ஈடுபட சீனா தயாராக உள்ளது என்றும், “நிரந்தர போர்நிறுத்த” ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதில் ஆக்கபூர்வமான பங்கை வகிக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் சீனாவின் முக்கிய அண்டை நாடுகள். இந்த இரு நாடுகளுடனும் உறவுகளை வளர்ப்பதற்கு சீனா முன்னுரிமை அளிக்கிறது என்று அவர் கூறினார்.