ரஷ்ய படையெடுப்பை தடுக்க உக்ரைனுடன் இந்தியா கூட்டு சேர வேண்டும் என்று உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷ்மிஹால் கேட்டுக்கொண்டார்.

ஐ.நா. பொது சபை மற்றும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் ஆகியவற்றில் கலந்து கொள்ளச் சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கரை உக்ரைன் பிரதமர் நேற்று சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள டெனிஸ் ஷ்மிஹால், “உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரை நிறுத்த படைகளில் சேர வேண்டியதன் அவசியத்தை நான் வலியுறுத்தினேன்” மற்றும் “இந்திய அரசு மேற்கொண்டு வரும் மனிதாபிமான உதவிக்கு நன்றி தெரிவித்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தனது பதிவில், “உணவு பாதுகாப்பு, ஆற்றல் பாதுகாப்பு மற்றும் அணுசக்தி நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் விளைவுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டது.

ரஷ்யா உடனான மோதல் குறித்த உக்ரைன் பிரதமரின் கருத்து மற்றும் மதிப்பீட்டைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைனில் உள்ள ஜபோரிஜியா அணுமின் நிலையத்தை (ZNPP) சுற்றியுள்ள பகுதியை பாதுகாப்பது குறித்தும், உணவு தானியங்களை கருங்கடல் வழியாக ஏற்றுமதி செய்வதற்கு இந்தியாவின் ஆதரவை நம்புவதாகவும் டெனிஸ் ஷ்மிஹால் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுசக்தி நிலையமான ZNPP தற்போது ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது, அதைச் சுற்றி ஷெல் தாக்குதல்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.