இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை நீக்க வகை செய்யும் வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக் குழு (UGC) வெளியிட்டுள்ளது.

2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின் மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவது குறைந்து பல்வேறு துறைகள் தங்கள் பணியாளர்களை நேரடி ஆள் சேர்ப்பு மூலம் தேர்ந்தேடுத்துக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில் உயர்கல்வி நிறுவனங்களின் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் இடஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்கள் டிசம்பர் 27 அன்று வெளியிடப்பட்டது.

இதில், இடஒதுக்கீட்டின் கீழ் போதுமான விண்ணப்பங்கள் பெறப்படாத பட்சத்தில் அந்த இடங்களை பொதுப்பிரிவின் கீழ் நிரப்ப வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் எஸ்சி/எஸ்டி ஆசிரியர் சங்கத்தினர், “UGC-யின் இந்த அளவுகோல்கள் தெளிவற்றவை மற்றும் எந்த ஒரு விண்ணப்பதாரரும் பொருத்தமானவர் அல்ல என்றும், இடஒதுக்கீடு அடிப்படையில் பதவியை வழங்க முடியாது என்றும் பல்கலைக்கழகங்கள் கூற வழிவகுக்கும், இதனால் இடஒதுக்கீடு என்பது முற்றிலும் கேள்விக்குரியதாகும்” என்று தெரிவித்துள்ளனர்.

UGC வெளியிட்டிருக்கும் இந்த வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து ஜனவரி 28க்குள் பொதுமக்களின் கருத்தை தெரிவிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.