ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 15 முதல் இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்களை அமெரிக்க மற்றும் அதன் நட்பு நாடுகள் தங்கள் நாட்டு விமானங்களில் அள்ளிச் சென்றுள்ளது.

சொந்த மண்ணில் அமெரிக்கர்களுக்காக வேலை பார்த்ததற்கு உபகாரமாக தங்களை விமானங்களில் அமெரிக்கா கூட்டிச் செல்வதாக நினைத்து அமெரிக்கா செல்லும் கனவுடன் ஏறிய மக்களுக்கு ஆப்கான் எல்லையைத் தாண்டியதும் அருகில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களில் இறக்கிவிடப்பட்ட பிறகு தான் தாங்கள் அமெரிக்காவுக்கு செல்லப்போவதில்லை என்ற உண்மை புரிந்துள்ளது.

ஜெர்மெனியில் உள்ள ரம்ஸ்டெய்ன் ராணுவ தளத்தில் தங்கவைக்கப்பட்டுள்ள ஆப்கானியர்கள்

அமெரிக்காவுக்கு வெளியே உள்ள மிகப்பெரிய ராணுவ தளமான ஜெர்மெனியில் உள்ள ரம்ஸ்டெய்ன் ராணுவ தளத்தில் இறக்கிவிடப்பட்ட அனைவரின் சுய விவரங்களை சேகரித்த அமெரிக்க ராணுவத்தினர், அவர்களுக்கான அமெரிக்க விசா உள்ளிட்ட நடைமுறைகள் முடியும் வரை வேறு நாடுகளில் தங்கவைக்க இருக்கிறது.

படம் நன்றி dw

அல்பேனியா, கனடா, கோஸ்டா ரிக்கா, சிலி, கொஸோவோ. வடக்கு மாசிடோனியா, மெக்ஸிகோ, போலந்து, கத்தார், ருவாண்டா, உக்ரைன், கொலம்பியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டதன் பேரில் சிறு சிறு குழுக்களாகப் பிரித்து இந்த நாடுகளில் தங்கவைக்க ஏற்பாடு செய்துள்ளது.

உகாண்டாவில் முகாமிற்கு அழைத்துச் செல்லப்படும் ஆப்கானியர்கள்

கொலம்பியாவில் 4000 நபர்களும், உகாண்டாவில் 2000 பேரையும் தங்கவைக்க அந்நாட்டு அரசாங்கம் ஒப்புக்கொண்டதை அடுத்து, முதல் கட்டமாக உகாண்டாவில் சிலரை குடியமர்த்தும் பணியில் ஈடுபட்டுள்ளது அமெரிக்கா.

தங்களின் எதிர்காலம் குறித்த கேள்வி ஆப்கானியர்களை அச்சத்தில் ஆழ்த்தி இருக்கும் நிலையில் அமெரிக்க ராணுவ தளங்களில் தங்கவைக்கப்பட்டிருக்கும் ஆப்கானியர்களை அமெரிக்காவுக்கு வெளியே மூன்றாம் நாடுகளில் இறக்கிவிட்டது எதனால் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.