சென்னை: எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு மருத்துவக்கல்வித்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மாலை வெளியிடுகிறார்.

தமிழகத்தில் தற்போதைய நிலையில், இஎஸ்ஐ மருத்துவக்கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் 37 மருத்துவக்கல்லூரிகள் உள்ளன.  இளநிலை எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு, அரசு மருத்துவ கல்லூரிகளின் மாநில ஒதுக்கீட்டில் 4349 இடங்கள் உள்ளன. மேலும், சுயநிதி கல்லூரிகளின் மூலம் கிடைக்கும் இடங்கள் 2650 என மொத்தம் 6999 மருத்துவப் படிப்புக்கான இடங்கள் உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவம் சார்ந் 19  பட்ட படிப்புகளுக்கு அரசு மருத்துவ கல்லூரிகளில் 22076 இடங்களும், சுய நிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 13,832 இடங்களும் உள்ளன.

இந்தநிலையில், இளநிலை மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ்  மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று மாலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  வெளியிடுகிறார்.

தரவரிசைப் பட்டியல் http://tnhealth.tn.gov.in, https://tnmedicalselection.net ஆகிய இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. அதைத்தொடர்ந்து,  மருத்துவ கலந்தாய்வு ஆன்லைனில்  நடைபெற உள்ளது.

மருத்துவ கலந்தாய்வானது, முதற்கட்டமாக ஜனவரி 27ந்தேதி தொடங்குகிகறது. அன்றைய தினம்  மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் ராணுவ வீரர்களின் வாரிசுகளை உள்ளடக்கிய சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

ஜனவரி 28ந்தேதி மற்றும் ஜனவரி 29 ஆகிய இரண்டு நாட்களில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ளது.

இந்த கலந்தாய்வு கொரோனா கட்டுப்பாடுகளுடன் சமூக இடைவெளியை பின்பற்றி நேரடியாக நடத்தப்படவுள்ளது. இதனையடுத்து, பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜன.30 ஆம் தேதியில் இருந்து ஆன்லைன் மூலம்  நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. பொறியியல் கலந்தாய்வு போன்று மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறவுள்ளது இதுவே முதல் முறையாகும்.

மேலும், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு அரசு மற்றும் சுய நிதி கல்லூரிகளின் மூலம் ஒதுக்கீடு செய்யப்படவுள்ள இடங்களுக்கும் ஜனவரி 30 ஆம் தேதியில் இருந்து கவுன்சிலிங் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.