மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு துபாயில் இருந்து நாடு திரும்பிய இளைஞர் ஒருவர் மீன் விற்கும் தனது தாயிடம் மீன் வாங்க வந்த வாடிக்கையாளர் போல சென்று ஆச்சரியமூட்டினார்.

கர்நாடக மாநிலம் உடுப்பியை அடுத்த கங்கொல்லியைச் சேர்ந்தவர் ரோஹித் 3 ஆண்டுகளுக்கு முன்பு வேலைக்காக துபாய் சென்ற அவர் தற்போது சொந்த ஊர் திரும்பியுள்ளார்.

தான் வரும் தகவலை ரகசியமாக வைத்திருந்த ரோஹித் தனது பெற்றோரை ஆச்சரியப்படுத்த திட்டமிட்டிருந்தார். சில தினங்களுக்கு முன்பு அரபிக் கடலை ஒட்டிய கரையோர கிராமமான கங்கொல்லி வந்த அவரை அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

ஆனால், தான் வரும்போது தனது தாய் சுமித்ரா வீட்டில் இல்லாததை அடுத்து வருத்தமடைந்த ரோஹித் கடற்கரையோரம் மீன் விற்றுக்கொண்டிருக்கும் தனது தாயிடம் குறும்பு செய்ய அவருக்கு அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக கைக்குட்டையால் தனது முகத்தை மறைத்து தொப்பி, கண்ணாடி சகிதம் மீன் வாங்க வந்த வாடிக்கையாளர் போல் அவர் முன் சென்றார்.

முதலில் வாடிக்கையாளர் என்று நினைத்து வியாபாரம் செய்த சுமித்ரா, வாடிக்கையாளரின் சைகையையும் குரலையும் கவனித்த தாயின் உள்ளம் இது தன் மகன் என்று அறிந்துகொண்டார்.

இதனையடுத்து அவர் தனது மகனை மகிழ்ச்சியில் கட்டிப்பிடித்து ஆனந்தத்தில் கண்ணீர் விட்ட அந்த தாயின் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.