சென்னை

ரியலூர் மாணவி கனிமொழி நீட் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்டதற்கு திமுக இளைஞர் அணித்தலைவர் உதயநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.  அதே வேளையில் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.  இதையொட்டி நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு ஒரு தீர்மானம் இயற்றி உள்ளது.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு நீட் தேர்வு அச்சத்தால் மேட்டூரைச் சேர்ந்த மாணவர் தனுஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.  இன்று அரியலூரை சேர்ந்த கனிமொழி என்னும் மாணவி தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.  மரணமடைந்த கனிமொழிக்கு தமிழக முதல்வர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது டிவிட்டரில்,

”நீட் பயத்தால் அரியலூர் மாணவி கனிமொழி தற்கொலை செய்து கொண்டது கடும் மன உளைச்சலையும் – வேதனையையும் தருகிறது. நீட் என்பது துரோகமும் – சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம், அதன் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். ஒன்றியத்தின் நீட் சூழ்ச்சிக்கு தற்கொலை தீர்வாகாது.”

என பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.