சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 125 இடங்களை தனித்து கைப்பற்றிய திமுக ஆட்சி அமைக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் பங்குபெறும் அமைச்சர்கள் குறித்த தகவல்கள் பரவி வருகின்றன.
இந்த அமைச்சரவை பட்டியலில், திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக கோபாலபுரம் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவும், மு.க.ஸ்டாலின் முதன்முதலாக பொறுப்பு வகித்த உள்ளாட்சித் துறை உதயநிதிக்கு ஒதுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
திமுக அமைச்சரவையில் இடம்பெறப்போகும் தகவல்கள் குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. 10முறை சட்டமன்ற தேர்தலில் வென்று தமிழக சட்டமன்றத்துக்குள் நுழையும் மூத்த உறுப்பினர் துரைமுருகனுக்கு சபாநாயகர் பதவி வழங்க திமுக தலைமை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல்வராக பதவி ஏற்கும் ஸ்டாலின், பொது, இந்திய நிர்வாக சேவை, இந்திய காவல்துறை சேவை, இந்திய வன சேவை, பொது நிர்வாகம், மாவட்ட வருவாய் அதிகாரிகள், காவல்துறை மற்றும் வீடு, ஊழல் தடுப்பு சட்டம், துணை ஆட்சியர்கள், திட்ட பணிகள் போன்ற துறைகளை கவனிப்பார்.
சுகாதாரத்துறை பொறுப்பு, ஆயிரம் விளக்கு தொகுதியில் வெற்றிபெற்ற டாக்டர் எழிலனுக்கு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னாள் கல்வி அமைச்சர் தங்கம் தென்னரசு மீண்டும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராகிறார்.
திமுக முதன்மைச்செயலாளர் கே.என்.நேருவுக்கு பொதுப்பணித்துறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இளைஞர்களை ஊக்கும் வகையில் உதயநிதியின் சகாக்கள் சிலருக்கும் அமைச்சர் பதவி வழங்கி அழகு பார்க்க திமுக தலைமை விரும்புகிறது. அதன்படி,
உதயநிதி ஸ்டாலின் பி.காம். உள்ளாட்சி துறை அமைச்சராகிறார்.
டி.ஆர்.பி.ராஜா எம்.எஸ்சி, பிஎச்.டி, தகவல் மற்றும் தொழில்நுட்பம்
அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு துறை,
ஏ.வெற்றி அன்பழகன் வணிக வரிதுறை பொறுப்புகள் வழங்கப்படும் என தகவல்கள் பரவி வருகின்றன.
திமுகவில் அமைச்சர் பொறுப்பு கேட்டு பலர் கோபாலபுரத்தை முற்றுகையிட்டு வரும் நிலையில், ஏற்கவே அமைச்சர் லிஸ்ட் முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.