சென்னை: இந்தியாவிலேயே முதன்முறையாக மெரினா கடற்கரையில் மாற்றுத் திறனாளிகளும் கடல் அலையைக் கண்டுகளிக்க ஏதுவாக அமைக்கப்பட்டுள்ள நிரந்தர மரப்பாதையை சேப்பாக்கம்-திருவல்லிகேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது மெரினா கடற்கரை. முக்கிய சுற்றுலா தளமாக திகழும் மெரினா கடற்கரைக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால், மெரினா கடற்கரையில் நடைபாதைகள், அணுகுசாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பலவற்றும் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் மாற்றுத் திறனாளிகள் கடற்கரைக்கு சென்று கடல் அலைகளை ரசிக்க முடியாத நிலை இருந்தது. இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், கடற்கரை சாலையில் மரத்திலான பாலங்களை அமைக்கும்படி தமிழகஅரசுக்கும் சென்னை மாநகராட்சிக்கும் அறிவுறுத்தியது. அதன்படி கடந்த அதிமுக ஆட்சியில் அதற்கான நடவடிக்கையை சென்னை மாநகராட்சி எடுத்தது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு, தற்காலிக சாலை அமைக்கப்பட்டு, மாற்றுத்திறாளிகள் கடற்கரைக்கு சென்று கடலை ரசித்து வந்தனர்.

பின்னர், திமுக ஆட்சியில் இது மேம்படுத்தப்பட்டது. அதன்படி,   சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் 1 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் மரப்பலகைகளால் ஆன நிரந்திர பாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான பணிகள் நடைபெற்று முடிந்தன. இதை அந்த தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 மரப்பாதையை திறந்து வைத்த உதயநிதி ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுடன் கடற்கரை வரை நடந்து சென்று மாற்றுத்திறனாளிகளுடன் கடல் அழகை கண்டு களித்தார். சிறிது தூரம் மாற்றுத்திறனாளியின் சக்கர நாற்காலியை அவரே தள்ளிச்சென்றார்.

3 சக்கர ஸ்கூட்டி முன்னதாக தயாநிதி மாறன் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 6 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டிகளை உதயநிதி ஸ்டாலின் இலவசமாக வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தயாநிதி மாறன் எம்.பி., மாநகராட்சி மேயர்ஆர்.பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் பேசிய மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங்பேடி,  மாற்றுத் திறனாளிகளுக்கான இந்த மரப்பாதை சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 14 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர் கடல் அருகே வரை சென்று அதன் அழகைக் கண்டு ரசிக்கலாம். விவேகானந்தர் நினைவிடம் எதிரே, மெரினா கடற்கரையின் ஆரம்பத்திலிருந்து கடல் முன்பு 10 மீட்டர் தூரம் வரை இப்பாதை நிறுவப்பட்டுள்ளது. மரப்பாதையின் தொடக்கத்தில், மாற்றுத் திறனாளிகளுக்கு பயன்படுத்துவதற்காக சக்கர நாற்காலிகள் 20 எண்ணிக்கையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவிலே முதல்முறையாக இதுபோன்ற பாதை தமிழகத்தில் தான் அமைக்கப்பட்டுள்ளது. பாதைஅருகே மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பறை வசதியும் தற்காலிகமாக ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மரப்பாதை குறித்து மாற்றுத்திறனாளி ஒருவர் கூறும்போது, “கடற்கரை அழகை தொலைக்காட்சிகளிலும், திரைப்படங்களிலும் பார்த்துக்கொண்டிருந்த எங்களுக்கு கடலின் அழகை அருகில் சென்று பார்ப்பதற்கும், கடலில் கால் நனைக்கும் வாய்ப்பையும் வழங்கி உள்ளது இந்த மரத்தால் ஆன சாய்வு தளம். இது மெரினாவோடு நின்றுவிடாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத்தளங்களிலும் அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்” என்றார்.