சென்னை: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள சொத்து விவரங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வருமானவரித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு வரும் 23ந்தேதி நடைபெற உள்ளது. முன்னதாக, , தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15ந்தேதி அன்று மாலை அறிவித்துள்ளது.  மார்ச் 30ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, ஏப்ரல் 23ம் தேதி 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தொடர்ந்து மே 4ம் தேதி பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் இந்த முறை 5 முனை போட்டி நிலவுகிறது.  இந்த நிலையில், வேட்பு மனுத் தாக்கல்  மார்ச் 30ந்தேதி தொடங்கிய நிலையில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற உதயநிதி ஸ்டாலின் இந்த முறையும், திருவல்லிக்கேணியிலேயே போட்டியிடுகிறார்.

இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களுக்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களுக்கும் முரண்பாடு உள்ளதாகவும் இதுகுறித்து விசாரணை நடத்த வருமானவரித் துறைக்கு உத்தரவிடக் கோரி அந்த தொகுதி வாக்காளர் குமாரவேல் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில்,  நான் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி வாக்காளராக உள்ளேன். எங்களது தொகுதியின் எம்எல்ஏ துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின். இவா் 2021-ஆம் ஆண்டு தோ்தலில் இத்தொகுதியில் போட்டியிட்டபோது தாக்கல் செய்த வேட்புமனுவில், ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் ரூ.7.36 கோடி முதலீடு செய்துள்ளதாகக் கூறியிருந்தாா்.

தற்போது அவா் தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் இதுதொடா்பான எந்தத் தகவலும் இல்லை. மேலும், அவரது மனுவில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்தில் ரூ.2.63 கோடி முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பரிவா்த்தனை குறித்து முறையான விளக்கங்கள் எதுவும் வேட்புமனுவில் தெரிவிக்கப்படவில்லை.

2021-ஆம் ஆண்டு தாக்கல் செய்த வேட்புமனுவில், ரூ.11.6 கோடி ஸ்னோ ஹவுசிங் நிறுவனத்துக்கு கடன் கொடுத்துள்ளதாக உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தாா். ஆனால் தற்போது தாக்கல் செய்துள்ள வேட்புமனுவில் ரூ.10 கோடி என குறிப்பிட்டுள்ளாா். மீதித்தொகை ரூ.1.6 கோடி திரும்பச் செலுத்தப்பட்டதா என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

2020-ஆம் ஆண்டுக்கு முன்பு ஆண்டுக்கு ரூ.2 கோடி வருமானம் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்த உதயநிதி ஸ்டாலின், தற்போது ரூ.10.98 கோடி வருமானம் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளாா். அவருக்கு வருமானம் மற்றும் சொத்துகள் அதிகரித்துள்ளன. ஆனால் அதற்குரிய விளக்கங்கள் தெரிவிக்கப்படவில்லை.

இதுபோல சொத்து விவரங்கள் குறித்து தவறான மற்றும் முழுமையற்ற தகவல்களை வேட்பாளா்கள் தெரிவிப்பது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்துக்கு விரோதமானது. எனவே இந்த முரண்பாடு குறித்து விசாரணை நடத்த வருமான வரித் துறை, கம்பெனி விவகாரத் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்

இந்த மனுமீதான விசாரணை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பாக  இன்று விசாரணைக்கு வந்தது. தேர்தல் தொடங்கி விட்டதனால் இதனை தேர்தல் மனுவாக எடுத்துக்கொள்ள முடியும் என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்கப்பட்டது. மேலும் உதயநிதியின் சொத்து விவரங்கள் தொடர்பாக ஏப். 20 ஆம் தேதிக்குள் வருமான வரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு அன்றைய தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]