சென்னை:  உலக புகழ் பெற்ற உடன்குடி கருப்பட்டிக்கு (பனை வெல்லம்)  புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதனால், பனை விவசாயிகள், கருப்பட்டி உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரு குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ  குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையும், நன்மதிப்பையும், பறைசாற்றும்  சான்றாக விளங்கும். இது ஒரு தனிப்பட்ட அடையாளங்காட்டி மட்டுமின்றி,  ஒரு குறிப்பிட்ட புவியியல் நிறுவனங்களில் உள்ள மற்றவற்றிலிருந்து வேறுபடுத்துகிறது.

பொதுவாக புவிசார் குறியீடு மனிதனால் படிக்கக்கூடிய மற்றும் குறுகிய அடையாளங்காட்டியாகும். தமிழ்நாட்டில் ஏற்கனவே ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி,  என ஏராளமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், தற்போது உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

தென்மாவட்டங்களில் குறிப்பாக, தூத்துக்குடி மாவட்டத்தில் பனை பொருட்கள் உற்பத்தி அதிகமாக காணப்படுகிறது. பல ஆயிரம் குடும்பங்கள் பனை தொழிலையே நம்பி வாழ்கின்றனர். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதனீர், அதன்மூலம் தயாரிக்கப்படும், கருப்பட்டி எனப்படும் பனை வெல்லம், பணங்கற்கண்டு, நொங்கு மற்றும் பனை ஓலையில் பல்வேறு வகையான பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இவை உலகம் முழுவதும் உள்ள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இவற்றில் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்பட்டி எனப்படும் பனை வெல்லத்துக்கு தனி மவுசு உண்டு. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள உடன்குடி பகுதியில் உற்பத்தி செய்யப்படும் கருப்பட்டி உலக புகழ் பெற்றது.  டயாபட்டீஸ் (நீரழிவு – சுகர்)  உள்ளவர்கள் பனை வெல்லத்தை தங்களது உணவுகளுடன் சேர்ப்பதால், எந்தவித பாதிப்பும் கிடையாது என்பதும் நிரூபிக்கப்பட்டு உள்ளது. இதனால், கருப்பட்டிக்கு மக்களிடையே தனி மவுசு உள்ளது.

இதையடுத்து உடன்குடி கருப்பட்டிக்கு புரிசார் குறியீடு வழங்க வேண்டும் என அம்மாவட்ட மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். உடன்குடி பனை விவசாய சங்கம் மற்றும் உடன்குடி பனை கருப்பட்டி பனங்கற்கண்டு நல அமைப்பினரும் புவிசார் குறியீடு பெற  தொடர் முயற்சி மேற்கொண்டு வந்தனர்.  இந்த நிலையில்,  உடன்குடி கருப்பட்டிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

உடன்குடி பனை விவசாய சங்கம் மற்றும் உடன்குடி பனை கருப்பட்டி. பனங்கற்கண்டு நல அமைப்பினர், இங்கு தயாராகும் கருப்பட்டியின் தரத்தை அறிந்திட உணவு பாதுகாப்புத் துறை மூலம் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், நபார்டு வங்கியின் மூலம் பனங்கருப்பட்டி நல அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில், உடன்குடி கருப்பட்டிக்கு அரசு புவிசார் குறியீடு வழங்கி பெருமை சேர்த்துள்ளது. இதற்கு  உடன்குடி மற்றும் தூத்துக்குடி மாவட்ட  பனை விவசாயிகளும் கருப்பட்டி உற்பத்தியாளர்களும்  நன்றி தெரிவித்துள்ளனர்.