வாஷிங்டன்:
நோயெதிர்ப்பு குறைபாடுள்ள நபர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசியைச் செலுத்த பைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா கொரோனா தடுப்பூசி நிறுவனங்களுக்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அவசரக்கால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கியிருக்கிறது.

“தற்போது நாடு கொரோனா தொற்றுநோயின் மற்றொரு அலையைச் சந்திக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA), நோயெதிர்ப்பு குறைபாடுள்ள மக்கள் கடுமையான நோய்க்கான ஆபத்தில் இருப்பதை உணர்கிறது. எனவே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடு கொண்ட நபர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி செலுத்த மருத்துவர்களின் பரிந்துரைகளுடன் அனுமதி வழங்கப்படுகிறது”என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் செயல் ஆணையர் ஜேனட் வூட்காக் கூறினார்.

தற்போது, ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், மாடர்னா தடுப்பூசி 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த இரண்டு தடுப்பூசிகளும் தொடர்ச்சியாக இரண்டு டோஸ்களாக செலுத்தப்படுகின்றன.

ஃபைசர் தடுப்பூசி மூன்று வார இடைவெளியிலும், மாடர்னா தடுப்பூசி ஒரு மாத இடைவெளியிலும் வழங்கப்படுகிறது. தற்போது குறைந்தபட்சம் 28 நாட்களுக்குப் பிறகு மூன்றாம் டோஸ் தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.