திருவள்ளூர்:

டைபயணமாக சொந்த சென்ற புலம்பெயர் தொழிலாளி பசியால் சுருண்டு விழுந்து இறந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு புலம்பெயர் தொழிலாளர் களின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிட்டது.  மத்திய மாநில அரசுகளின் சரியாக வழிகாட்டுதல்கள் மற்றும் திட்டமிடல் இல்லாத காரணத்தால், வேலையிழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பசியாலும், பட்டினியாலும் உயிரிழந்து வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு தொழிற்சாலைகள் உள்பட பெரும்பாலான நிறுவனங்களில் பணியாற்றி வருந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுகொண்டிருக்கின்றனர். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு தொழிற்சாலைகளில் ஏராளமான வடமாநிலத் தொழிலாளர்களும்,  வேலையின்றி  மூட்டை முடிச்சுகளுடன் சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை மார்க்கமாக கூட்டம் கூட்டமாக நடந்தே தங்களது சொந்த மாநிலத்திற்குச் செல்ல முயன்று வருகின்றனர்.
இவ்வாறு சென்றுகொண்டிருந்தவர்களை ஆந்திர எல்லையான பனங்காடு என்னும் பகுதியில் அம்மாநில காவல் துறையினர் தடுத்து நிறுத்தி வருகின்றனர்.  அப்போது, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த வடமாநிலத் தொழிலாளி ஒருவர் பட்டினியால் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று தண்ணீர் தெளித்து அவரை எழுப்பியுள்ளனர். ஆனால், அவரிடம் எந்த அசைவும் இல்லாததால் மருத்துவரை வரவழைத்து பரிசோதனை செய்ததில், அவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டது.

பின்னர் அவரிடமிருந்த பையை ஆய்வு செய்தபோது அதிலிருந்த ஆதார் அட்டை மூலம் உயிரிழந்தவர் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த ராம் தீ வாஸ் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கவரப்பேட்டை காவல் துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக பொன்னேரி அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர் பட்டினியால் வடமாநிலத் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.