அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் ராணுவம் காசாவில் இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதாக தென்னாபிரிக்கா தொடர்ந்த வழக்கை ஐ.நா. சர்வதேச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

தென்னாபிரிக்காவின் இந்த குற்றச்சாட்டை அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மறுத்துள்ள போதிலும் சர்வதேச நீதிமன்றத்தின் இந்த நடவடிக்கை அந்த இருநாடுகளுக்கும் பெரும் அடியாகப் பார்க்கப்படுகிறது.

ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டது, பல்லாயிரக்கணக்கான வீடுகள் அழிக்கப்பட்டது, கிட்டத்தட்ட 2 மில்லியன் காசா மக்கள் இடம்பெயர்ந்தமை மற்றும் பாலஸ்தீனியப் பகுதிக்கு எதிராக இஸ்ரேல் அதிகாரிகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் ஆகியவை இஸ்ரேலின் இனப்படுகொலையை உறுதிப்படுத்துவதாக தென்னாபிரிக்கா வாதிட்டது.

தவிர சர்வதேச உதவிகளையும் தலையீட்டையும் தவிர்ப்பதன் மூலம் இனப்படுகொலையை இஸ்ரேல் தீவிரமாக ஆதரிப்பதாக வாதிட்டனர்.

17 நீதிபதிகளில் பெரும்பான்மையானவர்கள் தென்னாப்பிரிக்காவின் கூற்றை ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து இனப்படுகொலைகளை தடுக்கவும், இனப்படுகொலையை தூண்டுவதை நிறுத்தவும், இனஅழிப்பு நடவடிக்கையில் ராணுவத்தை ஈடுபடுத்துவதை நிறுத்தவும் இஸ்ரேலுக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை அனுமதிக்கவும், சர்வதேச சட்ட மீறல்களுக்கான ஆதாரங்களை பாதுகாக்கவும் உத்தரவிட்டுள்ளதோடு தங்கள் உத்தரவுகள் மீதான நடவடிக்கை குறித்து ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஹமாஸால் பிடித்துவைக்கப்பட்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகளை ஒப்புக்கொண்ட தலைமை நீதிபதி ஜோன் டோனோகு, “உடனடியான, நிபந்தனையற்ற விடுதலையை” விரும்புவதாகவும், “இந்தப் பகுதியில் நிகழும் மனித அவலத்தை நீதிமன்றம் துல்லியமாக அறிந்திருக்கிறது” என்றும் கூறினார்.

காஸாவில் இனப்படுகொலையை நிறுத்த “உடனடி மற்றும் பயனுள்ள நடவடிக்கைகளை” தொடங்குமாறு சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேலுக்கு உத்தரவிட்டுள்ளதை அடுத்து இஸ்ரேல் அரசு இனப்படுகொலையில் ஈடுபட்டு வருவதை உறுதி செய்திருப்பதுடன் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான இந்த வழக்கில் தென்னாபிரிக்கா வெற்றிபெற்றுள்ளதாயே காட்டுகிறது.