வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வெற்றி குறித்து சமூகவலைதளவாசிகளிடையே இருவேறுபட்ட கருத்து மோதல்கள் நிலவி வருகின்றன.

கடந்த மக்களவை பொதுத்தேர்தலில், பல தொகுதிகளில் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற திமுக, வேலூரில் திக்கித் திணறி, முக்கி முனகி வெறும் 7734 வாக்கு வித்தியாசத்திலேயே வென்றுள்ளது. இது வெற்றியே அல்ல.

நோட்டாவைவிட குறைந்த வாக்கு வித்தியாசத்திலேயே வென்றுள்ளது. இதன்மூலம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக பெற்றது உண்மையான வெற்றியல்ல. எதிர்ப்பலைக்கு கிடைத்த வெற்றிதான்.

கடந்த 8 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்தாலும், அதிமுகவை யாராலும் அசைக்க முடியவில்லை. எனவே, அடுத்த சட்டமன்ற தேர்தலிலும் அதிமுகவே வெற்றிபெறும் என்பது ஒரு தரப்பாரின் கருத்து.

இதற்கு எதிராக மற்றொரு தரப்பார் கூறும் கருத்தாவது; பொதுத்தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் என்பதற்கு நிறைய வித்தியாசங்கள் உள்ளன. பொதுத்தேர்தலில்கூட சில தொகுதிகள் சவாலானவையாக இருக்கும் அல்லது அப்படியாக மாற்றப்படும். கடந்த பொதுத்தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் திருமாவளவனை தோற்கடிக்க பல சக்திகள் பகீரத முயற்சி எடுத்ததன் விளைவு அவர் தட்டுத்தடுமாறி இழுபறியில் ஜெயிக்க வேண்டியதானது.

வலுவான ஜாதியப் பின்புலம் மற்றும் ஜாதியப் பிரச்சாரத்தால் தருமபுரி தொகுதியில் அன்புமணியை வீழ்த்துவதும் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

வேலூரைப் பொருத்தவரை, ஏ.சி.சண்முகம் 2014ம் ஆண்டே அதிமுக கூட்டணி இல்லாமல் இரண்டாமிடம் பெற்றவர். பணத்தை ஆறாக ஓட விடுபவர். கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அள்ளி வீசுபவர். பிரச்சார வியூகத்தை சிறப்பாக வகுப்பவர் மற்றும் ஒவ்வொரு பகுதியிலும் தனி கவனம் செலுத்துபவர். அவரின் பணபலத்தைக் கண்டு துரைமுருகன் மிரண்டவர்.

தற்போது, வேலூர் மக்களவைத் தேர்தல் என்பது ஒரு தனி தேர்தலாக நடைபெற்ற நிலையில், அதில் ஆளுங்கட்சி எப்படியான கவனத்தை செலுத்தியிருக்கும் மற்றும் ஏ.சி.சண்முகம் எப்படி இன்னும் கூடுதலாக வீரியம் காட்டியிருப்பார் என்பதை தனியாக விவரிக்கத் தேவையில்லை. இடைத்தேர்தல்களைப் பொறுத்தவரை, ஆளுங்கட்சிக்கு கிடைக்கும் பல சாதகங்கள் எதிர்க்கட்சிக்கு நிச்சயம் கிடையாது.

மேலும், துரைமுருகனின் மகனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதில் திமுகவில் உள்கட்சி பூசல் நிலவியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்தமுறையே ஒருதலைபட்சமான கெடுபிடியில் சிக்கி பாதிக்கப்பட்டனர் துரைமுருகன் தரப்பு.

எனவே, ஆளுங்கட்சியுடன் ஒப்பிடுகையில் பல்வேறு இடைஞ்சல்களுடன்தான் களமிறங்கியது திமுக. இதில் நாம் தமிழர் மற்றும் பல சுயேட்சைகள் உட்பட வாக்குகளைப் பிரித்தவர்கள் ஏராளமான பேர். எனவே, திமுக பெற்ற வெற்றி முற்றிலும் மக்கள் செல்வாக்கின் அடிப்படையிலானது! என்கின்றனர்.