சென்னை: பிளஸ்2 பொதுத்தேர்வுக்கு இரண்டு வகையான வினாத்தாள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், தேர்வுக்கு முன்பு வினாத்தாள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில்  12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த தேர்வை 7.25 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.  இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், பள்ளிகளில் திருப்புதல் தேர்வு, கூடுதல் நேர வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்,  ‘பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்களுக்கு இரு வகையான வினாத்தாள் வழங்கப்படும்’ என, அறிவிக்கப்பட்டுள்ளது.  பொதுத் தேர்வுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகள்  மற்றும் வினாத்தாள் முன்கூட்டியே வெளியேறுவதை தடுப்பது குறித்து, ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழி கையேடு வழங்கப்பட்டுள்ளது.

அதில், தேர்வில் மாணவர்கள் காப்பியடிப்பதை தடுக்கும் வகையில், ஒவ்வொரு தேர்வு அறையிலும், இரு வகையான வினாத்தாள்கள் வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏ, பி, என இரண்டு வகையான வினாத்தாள் மாணவர்களுக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டிலும் வினாக்கள் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால், கேள்வியின் வரிசைகள் மாற்றப்பட்டிருக்கும்.

ஒரு தேர்வு மையத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், ஒரே வகை வினாத்தாள் வழங்குவதற்கு பதில், அருகருகே அமர்ந்திருக்கும், ஒவ்வொருவருக்கும் வினாத்தாள் வகை மாற்றி, மாற்றி வழங்கப்படும்.

வினாத்தாள் முன்கூட்டியே கசியாமல் தேர்வு பணியில் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.

தேர்வு அறைக்குள் ஆசிரியர்கள், முதன்மை கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டவர்களும், மாணவர்களும் மொபைல் போன் எடுத்து செல்லக்கூடாது. மீறினால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, அறிவுரைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதுகுறித்து கூறியுள்ள தேர்வுத்துறை அதிகாரிகள், தற்போது நடைமுறைப்படுத்தப்பட உள்ள  இந்த முறை 15 வருடத்திற்கு முன்பே இருந்து உள்ளது. ஏ, பி, சி, டி என 4 வகையான வினாத்தாள் தயாரிக்கப்படும். தற்போது 2 வகையில் வினாத் தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் காப்பி அடிப்பதை தடுக்க முடியும் என்றார்.