திருவள்ளுர்: தை பிரமோற்சவத்தை முன்னிட்டு, புகழ்பெற்ற திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடைபெற்றது.

108 திவ்ய தேசங்களில்  ஒன்று திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவில். புகழ்பெற்ற இந்த ஸ்தலத்தில், ஆண்டுதோறும் தை மாத பிரம்மோற்சவ விழா10 நாள்கள் விமரிசையாக நடைபெறும். இதையொட்டி  தினசரி சிறப்பு அலங்காரத்தில் வெவ்வேறு வாகனங்களில் உற்சவா் வீதி உலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலிப்பது வழக்கமாகும். காலை 7 மணிக்கு தங்க சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் வைத்திய வீரராகவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக கோயில் மாட வீதிகள் வழியாக புறப்பாடு வந்து செல்வா் மண்டபத்தில் காட்சியளித்தாா். இரவு கோயில் உள்பிராகாரத்தில் சிம்ம வாகனத்தில் சுவாமி புறப்பாடு நிகழ்வு நடைபெற்றது.

அதன்படி இந்த ஆண்டும் தை பிரமோற்சவ விழா கடந்த  ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 4ந்தேதி) அதிகாலையில்  கொடியேற்றதுடன்  தொடங்கியது. தொடா்ந்து வரும் 13- ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக பிப்ரவரி 5ந்தேதி காலை உற்சவா் ஹம்ச வாகன அலங்காரத்திலும், இரவு சூரிய பிரபை அலங்காரத்திலும் பக்தா்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து, பிரம்மோற்சவத்தின் 3-ஆம் நாளான 6-ஆம் தேதி கருட சேவை, கோபுர தரிசனம் நடைபெற்றது. . 7 -ஆவது நாளான இன்று  10-ஆம் தேதி தோ்த் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

முன்னதாக இன்று காலை 7மணி அளவில்  சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வீரராகவர் பெருமாள் எழுந்தருளினார். பின்னர் தேர் நான்கு மாட வீதிகள் வழியாக வந்து மீண்டும் தேரடியை வந்தடைந்தது.

இந்த விழாவில் காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதியிலிருந்து பல ஆயிரம்  பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் கோவிந்தா… கோவிந்தா… என்ன பக்தி பரவசத்துடன் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர் சக்கரத்தின் மீது கொட்டி தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.

இதைத்தொடர்ந்து வரும்  12 -ஆம் தேதி ரத்னாங்கி சேவை நடைபெற உள்ளது.