தென் ஆப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்துக்கு வந்து இறங்கிய பயணி ஒருவருக்கு ஒமிக்ரான் வம்சாவளியைச் சேர்ந்த வேறொரு புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
ஒமிக்ரான் வகையைச் சேர்ந்தது என்பதற்கு போதுமான குறிப்புகள் உள்ள போதும், இந்த புதிய வகையில் ஒமிக்ரானின் பாதியளவு மரபணு மாற்றமே உள்ளது.
இந்த புதிய வகை உருமாற்ற கொரோனா வைரஸை வழக்கமான சோதனைகள் மூலம் உறுதிப்படுத்த முடியாது என்று குயின்ஸ்லாந்த் மாநிலத்தின் தலைமை சுகாதார அதிகாரி பீட்டர் ஐட்கன் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வைரஸின் பாதிப்பு மற்றும் அதன் விளைவுகள் குறித்தோ, தடுப்பூசி போட்டவர்களை தாக்கும் விதம் குறித்தோ ஏதும் இதுவரை உறுதிப்படுத்தப் படவில்லை என்று தெரிவித்த அவர், இப்போதைக்கு ஒமிக்ரான் மற்றும் ஒமிக்ரான் போன்ற மற்றொரு வகை கொரோனா வைரஸ் இருப்பது மட்டுமே உறுதிசெய்யப்பட்டிருக்கிறது என்று கூறினார்.