சென்னை:

முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் தவிர மேலும் 2 சொத்துக்கள் இருப்பது சமீபத்தில் வருமான வரித்துறை தாக்கல் செய்த மனு காரணமாக வெளியே தெரிய வந்துள்ளது.

இதில் மந்தைவெளியில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான  ஒரு வணிக வளாகம் தற்போது குப்பை கூளங்கள் போடும் இடமாக மாறி உள்ளது. இது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த சென்னை போயஸ்கார்டன் பகுதியில் உள்ள வேதா இல்லம் என்ற வீடு இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், அதை வருமான வரித்துறை முடக்கி இருப்பது சமீபத்தில் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போதுதான் தெரிய வந்தது. இந்த நிலையில், சென்னையில் உள்ள மேலும் 2 சொத்துக்கள் குறித்தும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

மறைந்த ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை , அரசுடமையாக்கி நினைவில்லமாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்து வருமான வரித்துறை தாக்கல் செய்த பதில் மனுவில், கடந்த 2007ம் ஆண்டு முதல் ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.16 கோடி வருமான வரி பாக்கிக்காக   அவரது போயஸ் தோட்ட இல்லம் உள்பட சில சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தது. அதில், போயஸ் தோட்ட இல்லம், ஐதராபாத் திராட்சைதோட்டம் மற்றும் சென்னையில் உள்ள 2 இடங்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, பிரபல வணிக வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவுக்கு சொந்தமான ஒரு கடை மற்றும், சென்னை மந்தவெளியில் உள்ள 1500 சதுர அடி உள்ள வணிக வளாகம்  வெளிச்சத்துக்கு வந்து உள்ளது.

போயஸ்கார்டன் வீடு அனைவருக்கும் தெரிந்ததே. ஆனால், சென்னையில் மையப்பகுதியில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துக்கள் பெரும்பாலானோருக்கு தெரிய வாய்ப்பில்லை. அந்த சொத்துக்கள் தற்போது தெரிய வந்துள்ளது.

சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பிரபலமான பார்சன் காம்ப்ளக்சில் ஜெயலலிதா வுக்கு சொந்தமான ஒரு கடை உள்ளது. இந்த கடையானது கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கப்பட்டதாகவும், அது ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்ல முகவரியில் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.  ஆனால், அந்த இடத்தில், பல ஆண்டுகளாக ஜெராக்ஸ் கடை நடத்தப்பட்டு வந்தது.  அந்தை கடையை நடத்தி வந்தவர் சசிகலாவின் உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போதும் சசிகலாவின் உறவினர்கள் கைக்குள் இருக்கும் அந்த கடை தற்போது டீக்கடையாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது.

அதுபோல மற்றொரு சொத்து,  மந்தவெளி செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள 1500 சதுர அடி அளவிலான வணிக வளாகம். இந்த இடத்தை ஜெயலலிதா அரசியலுக்கு வருவதற்கு முன்போ, அதாவது  1980ம் ஆண்டுக்கு முன்பே வாங்கப்பட்டது என்றும், ஜெயலலிதா நடிகையாக இருந்தபோது வாங்கிய சொத்து என்றும் கூறப்படுகிறது.

தொடக்கத்தில் இந்த இடத்தில் அரிசி கடை இருந்ததாகவும், பின்னர் லெதர்கம்பெனி நடத்தப் பட்டது என்றும், தற்போது இரண்டு சக்கர வாகன பொருட்கள் சேமிக்கும் குடோனாக உள்ளது. அதற்கு வாடகை மாதம் ரூ.75 ஆயிரம் வாடகை என்றும் கூறப்படுகிறது. ஆனால் இந்த சொத்தும் சசிகலா வகையறாக்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தற்போது, இந்த வணிக வளாகத்தில் உள்ள கடைகளில், கட்டிட கழிவுகளான  ரப்பீஸ்  , கொட்டி வைக்கப்பட்டு இருப்பதாகவும், குப்பை கூளங்கள்  கொட்டப்பட்டு பாழடைந்து உள்ளது.

இந்த தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.