மும்பை,

ங்ளிகில் பணத்தட்டுபாடுகள் நீங்கி இயல்புநிலை திரும்ப இரண்டு மாதம் ஆகும் என எஸ்.பி.ஐ. தலைவர் கூறியுள்ளார்.

 

கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்தியஅரசு அறிவித்தது. கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையால் பணப்புழக்கம் குறைந்தது.

புதிய ரூ.2000, ரூ. 500 நோட்டுகள் போதுமான அளவு அச்சடிக்கப்படாததால் வங்கிகளில் பணத் தட்டுப்பாடு ஏற்பட்டது. வங்கிகளில் இருந்து மக்கள் பணம் எடுக்க முடியாமல் திண்டாடி வருகிறார்கள்.

மோடி அறிவித்த 50 நாட்களை தொடர்ந்தும் மக்கள் பணப்புழக்கம் இன்றி தவித்து வருகிறார்கள்.
போதுமான அளவு பணம் வினியோகிக்கப்பட முடியாததால் ஏ.டி.எம்.களும் 50 நாட்களுக்கு மேலாக முடங்கி கிடக்கின்றன. ஒரு சில ஏ.டி.எம்.கள் மட்டுமே செயல்படுகின்றன.

இந்நிலையில், பிப்ரவரி மாத கடைசிக்குள் அல்லது மார்ச் மாதம் வங்கி நடைமுறைகளில் இயல்பு நிலை திரும்பும் என்று ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “வங்கிகளில் இருப்பு அளவு அதிகரிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வைப்புத் தொகை எப்படி போகிறது என்பதை மார்ச் மாதம் வரை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இருப்பினும், கட்டுப்பாடுகளை திரும்ப பெறும் வரை எதுவும் சொல்ல முடியாது” என்று கூறினார்.