சென்னை:

ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையால் 50 நாட்களில் கூடுதலாக பணியாற்றிய நேரத்திற்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.


கறுப்பு பணம், கள்ள நோட்டை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியானது முதல் கடந்த 50 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் உள்ள வங்கிகள், ஏ.டி.எம்-களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் ஊழியர்கள் தங்களது பணி நேரத்தை விட கூடுதலாக வேலை பார்த்துள்ளனராம்.
அதனால் இந்த 50 நாட்களுக்கு கூடுதல் பணி நேரத்திற்கு ஊதியம் வழங்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து தேசிய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிக்கையில், கடந்த 50 நாட்களில் வங்கி ஊழியர்கள் 1,2-18 மணி நேரம் பணி புரிந்தனர். ஆனால், சில வங்கிகள் மட்டும் தான் கூடுதலாக பணியாற்றிய நேரத்தில் ஓவர் டைமாக ஏற்றுக் கொண்டது. வேலை நேரத்தை தாண்டி கூடுதலாக பணியாற்றியதை ஓவர் டைமாக வங்கி நிர்வாகங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.