சென்னை:
மிழகத்தில் தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கும் இரு திராவிடக் கட்சிகளும்தான் காரணம்” என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்று போற்றும் அளவுக்கு கல்வி ஒரு காலத்தில் ஈடு இணையற்ற உன்னத சேவையாக இருந்து வந்தது. ஆனால், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் எல்லையில்லா லாபம் தரும் வணிகமாக மாறி விட்டது. கல்வி வணிகமயமானதற்கும், கட்டணக் கொள்ளை தொடர்வதற்கும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய  இரு திராவிடக் கட்சிகள் தான் காரணமாகும்.
கல்விக் கட்டணக் கொள்ளையைத் தடுக்கும் நோக்குடன் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிக்க, சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது. ஆனால் அந்த குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட பல மடங்கு கட்டணத்தை தனியார் பள்ளிகள் பத்தாண்டுகளுக்கும் மேலாக வசூலித்து வருகின்றன.
download (3)
ஆனால், இன்று வரை ஒரு பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில்லை. மாறாக கல்விக் கட்டணக் கொள்ளையை எதிர்த்து போராட்டம் நடத்தும் பெற்றோர்கள் தான் மிரட்டப் படுகின்றனர். காரணம், பள்ளி நிர்வாகங்கள் ஆட்சியாளர்களின் செல்லப்பிள்ளையாக இருப்பது தான்.
தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக கடைசியாக அமைக்கப்பட்டக் குழு நீதிபதி சிங்கார வேலு தலைமையிலான குழு தான். அக்குழுவின் பதவிக்காலம் கடந்த ஆண்டு முடிவடைந்து விட்டது. அக்குழுவால் நிர்ணயிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்கான கட்டண விகிதமும் காலாவதியாகிவிட்டது. இதுபோன்ற சூழல்களில் கடந்த ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தான் இந்த ஆண்டும் பள்ளி நிர்வாகங்கள் வசூலிக்க வேண்டும்.
ஆனால், தனியார் பள்ளிகளோ, இவ்வாண்டு தங்களைக் கட்டுப்படுத்த எந்த அமைப்பும் இல்லை என்று கூறி விருப்பம் போல கட்டணம் வசூலிக்கின்றனர். தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகள் இந்த ஆண்டு வெளிப்படையாக கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் சூழல் எதிர்பாராமல் ஏற்பட்டதில்லை. மாறாக தமிழக அரசால் திட்டமிட்டே ஏற்படுத்தப்பட்டதாகும்.
நீதிபதி சிங்காரவேலுவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பது தமிழக அரசுக்கு ஏற்கனவே தெரியும். மாணவர்களின் நலனில் அக்கறை உள்ள அரசாக இருந்தால் நீதிபதி சிங்கார வேலு ஓய்வு பெற்றதுமே புதியக் குழுவை அமைத்து கட்டண நிர்ணயத்திருக்கலாம் அல்லது வேறு நடவடிக்கை எடுத்திருக்கலாம்.
ஆனால், எதையும் செய்யாததற்கு காரணம் தனியார் பள்ளிகள் மீதான பாசம் தான். இப்படிப்பட்டதொரு நிலைமை உருவாக வேண்டும்; அதன்மூலம் தனியார் பள்ளிகள் விருப்பம் போல கட்டணம் வசூலித்து பயனடைய வேண்டும் என்று திட்டமிட்டே இப்படி ஓர் ஏற்பாட்டை அரசு செய்திருப்பதாகத் தோன்றுகிறது
ஏழை மாணவர்கள் பாதிப்பு தனியார் பள்ளிகள் அளவுக்கதிகமாக கட்டணம் வசூலிப்பதால் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவர்கள் கட்டணம் கட்ட முடியாமல் படிப்பை பாதியில் நிறுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி இலவசமாக நிரப்பப்பட வேண்டிய 25% இடங்களும் முறையாக நிரப்பப்படவில்லை.
பள்ளி நிர்வாகங்களிடமிருந்து கிடைக்க வேண்டியது கிடைத்துவிட்டது என்பதற்காக கட்டணக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்க்கக்கூடாது. உடனடியாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், கல்வியாளர்கள் அடங்கிய குழுவை அமைத்து அனைத்து தனியார் பள்ளிகளிலும் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும். கடந்த ஆண்டுக்கான கட்டணத்தை விட அதிகமாக வசூலித்த பள்ளிகளின் அங்கீகாரத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறேன்” – இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.