சென்னை: பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக தமிழகம் வருகிறார். கேலோ இந்தியா விளையாட்டு போட்டியை தொடங்கு வைக்கும் பிரதமர், தொடர்ந்து ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.
ளுனுகேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் வருகிற 19-ந்தேதி சென்னையில் தொடங்குகிறது. இந்த போட்டி ஜனவரி 19 முதல் ஜனவரி 31-ந்தேதி வரை தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் அனைத்து மாநிலங்களில் இருந்து 6000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
இப்போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அதை ஏற்ற பிரதமர் மோடி, விளையாட்டு விழாவை தொடங்கி வைக்க தமிழ்நாடு வருகிறார். அதன்படி, இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். வருகிற 19-ந்தேதி நடைபெறும் கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். பின்னர், 20-ந்தேதி திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்று அங்கு சாமி தரிசனம் செய்கிறார். மேலும் ராமேஸ்வரம் செல்லும் பிரதமர் மோடி மறுநாள் அங்கு புனித நீராடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது தமிழக விஜயம் ஆன்மிக பயணமாகவும் இடம்பெற்றுள்ளது.