அக்டோபர் 25 ம் தேதி துவங்கிய வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு மாதமாக பெய்துவரும் தொடர் மழையால் தமிழகம் முழுவதும் நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.
சென்னையை ஒட்டியுள்ள வடமாவட்டங்களில் உள்ள அனைத்து ஏரி குளங்களும் நிரம்பி வழிவதால் வெளியேறும் உபரி நீர் சென்னையின் புறநகர் பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலங்களில் சமீப ஆண்டுகளாக புயல் காற்று மட்டுமே வீசிவந்த நிலையில் இந்த ஆண்டு தற்போது வரை பெய்துள்ள மழை காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது மட்டுமல்லாமல் சென்னையின் பல்வேறு சாலைகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியுள்ளது.
இந்நிலையில், வங்கக் கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக இருப்பதாகவும் அது புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 1 ம் தேதி வங்கக் கடலில் புயல் உருவாகும் அதே வேளையில் அரபிக் கடலிலும் மற்றொரு புயல் உருவாக இருப்பதாக கூறியிருக்கிறது.
இந்த இரண்டு புயல் காரணமாக தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்யும் என்றும் வங்கக் கடலில் உருவாகவிருக்கும் புயல் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களுக்கு இடையே கரையைக் கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.