தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், பிறப்பு சான்றிதழ் வழங்ககப்படும் மோசடி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1
கருங்குளத்தை சேர்ந்த திருமலைநம்பி – முப்பிடாதி தம்பதியினருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் தேதி நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது.    இதே போல் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியை சேர்ந்த கண்ணன் – சங்கரம்மாள் தம்பதியினருக்கு 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ம் தேதி அம்பாசமுத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
இந்த இரு குழந்தைகளும் அந்ததந்த மருத்துவமனைகளில் பிறந்ததற்கான பிறப்புச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டு பெற்றோரிடம் இருக்கிறது. ஆனால் இந்த இரு குழந்தைகளுக்கும், கீழசெக்காரகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்தாக பிறப்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக இரு குழந்தைகளுக்கும் இரு  பிறப்புச் சான்றிதழ்கள் உள்ளன.
இந்த சம்பவம் குறித்து நெல்லையை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விவரங்களைக் கோரினார். அதற்கு வந்த பதிலில் தூத்துக்குடி மாவட்ட சுகாதார துறை இணை இயக்குநர் குழந்தைகள் இருவரும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறந்திருப்பதாக  பதிவேடுகள் இருப்பதாக அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளார்.  ஆனால்  இந்த இரு குழந்தைகளும் அங்கு பிறக்கவில்லை. வேறு (தனியார்)  மருத்துவமனைகளில் பிறந்தன. இதை, அந்த குழந்தைகளின் பெற்றோ்கள் உறுதி செய்கிறார்கள்.
போலியாக சான்றிதழ் அளிக்கப்பட்ட, கீழசெக்காரக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் தற்போது  பணியாற்றும் மருத்துவ அதிகாரி “அந்த இரு குழந்தைகளும் இங்கே பிறந்ததாக ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டிருக்கிறது. நான் அதன் பிறகு இங்கு பணக்கு வந்தேன்.  எனக்கு வேறு ஒன்றும் தெரியாது” என்று சொல்லி முடித்துக்கொண்டார்.
“அரசின் சார்பில் வழங்கப்படும் நிதி உதவிகளைப் பெறுவதற்காக அரசு அதிகாரிகளே போலியாக இதுபோன்ற பிறப்புச்சான்றிதழ்களை வழங்குகின்றார்களா” என்று  வழக்கறிஞர் பிரம்மா கேள்வி எழுப்புகிறார்.
நியாயமான கேள்வி. அரசுதான் பதில் அளிக்க வேண்டும்.