டெல்லி: பிரபல சமூக வலைதளமான டிவிட்டர் நிறுவனத்துக்கு இந்தியாவில் 3 கிளைகள் உள்ள நிலையில், அதில் இரண்டை மூடப்போவதாக அறிவித்து உள்ளது.

டிவிட்டர் நிறுவனத்தை வாங்கிய எலான் மஸ்க், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்ததுடன், ஏராளமானோரை வீட்டுக்கும் அனுப்பினர்.  இந்தியாவில் பணியாற்றி வந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட பணியாளர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். இது டுவிட்டர் இந்தியா ஊழியர்களில் சுமார் 90 சதவீதம்  என கூறப்பட்டது.

இந்த நிலையில், தற்போது, டிவிட்டருக்கு இந்தியாவில் இருந்த 3 அலுவலகங்களில் இரண்டை மூடுவதாக அறிவித்து உள்ளது. டெல்லி, மும்பை மற்றும் பெங்களூரு என 3 இடங்களில் டிவிட்டர் அலுவலகம் இருந்த நிலையில்,  டெல்லி, மும்பை அலுவலகங்களை மூடப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

டிவிட்டர் சிஇஓ எலான் மஸ்க் சமீபகாலமாக செலவினங்களை குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதன்படி இந்த 2 அலுவலகங்கள் மூடப்படுவதாக கூறப்படுகிறது. அதில் பணியாற்றி வரும் ஊழியர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.