சென்னை,
இரட்டை இலை சின்னம் குறித்தான வழக்கு இன்று 6வது வட்டமாக மீண்டும் நடைபெறுகிறது. வரும் 10ந்தேதிக்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவுறுத்தி உள்ளதால் விசாரணை எப்போது முடியும், இரட்டை இலையை யாருக்கு என்று தேர்தல் கமிஷன் எப்போது சொல்லும் என்று அதிமுகவினர் எதிர்பார்த்து உள்ளனர்.
அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சி இரண்டாக பிளவுபட்டது. சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் இயங்கி வந்தது. பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் அவரது அணியைச் சேர்ந்த எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் அணி இணைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தினகரன் தலைமையில் தனி அணி ஒன்றும் செயல்பபட்டு வருகிறது.
இதையடுத்து முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்க இரு அணியினரும் தேர்தல் ஆணையத்தில் பிரம்மான பத்திரம் தாக்கல் செய்தும், தங்களது தரப்பு வாதங்களையும் தெரிவித்து வருகின்றனர்.
ஏற்கனவே இது தொடர்பான விசாரணை தேர்தல் ஆணையத்தில் தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே.ஜோதி தலைமையில் நடந்து வருகிறது. ஏற்கனவே முதல்கட்ட விசாரணை கடந்த 6-ம் தேதியும், இரண்டாம் கட்ட விசாரணை கடந்த 13-ம் தேதியும் , மூன்றாம் கட்ட விசாரணை கடந்த 23-ம் தேதியும் நடைபெற்றுள்ளது. 4வது கட்ட விசாரணை கடந்த கடந்த அக்டோபர் 30ந்தேதியும், 5வது கட்ட விசாரணை கடந்த 1ந்தேதியும் நடைபெற்றது.
கடந்த விசாரணையின்போது, சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்களது தரப்பு வாதங்களை எடுத்து வைத்தார். இதன் காரணமாக, சசிகலா அணியினர் வேண்டுமென்றே விசாரணையை இழுத்தடிப்பதாக ஒருங்கிணைந்த அணியினர் குற்றம்சாட்டினர். சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த விசாரணைக்குப்பின் அடுத்த கட்ட விசாரணைக்காக வழக்கு 6-ந் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இந்த வழக்கில் 6-ம் கட்ட விசாரணை இன்று (திங்கட்கிழமை) தேர்தல் கமிஷனில் நடைபெறுகிறது. இன்று பிற்பகல் தேர்தல் ஆணையத்தில் நடைபெற உள்ளது.
இதையொட்டி அதிமுக அணிகளின் தலைவர்கள் டில்லியில் முகாமிட்டுள்ளனர். இன்றைய விசாரணைக்கு பிறகாவது தேர்தல் கமிஷன் தனது தீர்ப்பை வழங்குமா அல்லது விசாரணையை மீண்டும் ஒத்தி வைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
இது குறித்த வழக்கு ஒன்றில் நவ.10ந்தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.