சென்னை: இரட்டை இலை சின்னம் பெற டிடிவி தினகரன் தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்க ரூ.2 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றது தொடர்பான வழக்கில், முக்கிய சாட்சியான வழக்கறிஞர் கோபிநாத் திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பிய நிலையில், அவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இரட்டை இல்லை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக கூறப்படும் வழக்கில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தரகராக செயல்பட்ட  சுகேஷ் சந்திர சேகரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, டிடிவி தினகரனை விசாரிக்கவும் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஏற்கனவே டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் தினகரன், சுகேஷ் சந்திர சேகரிடம் விசாரணை நடத்தியிருந்தனர். இரட்டை இல்லை சின்னத்தை பெற்று தர சுகேஷ் சந்திரசேகருக்கு ரூ.10 கோடி லஞ்சம் தந்தாக புகார் எழுந்திருந்த நிலையில், தற்போது டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக கூறப்பட்ட பூந்தமல்லி நீதிமன்ற வழக்கறிஞரான கோபிநாத், திருவேற்காட்டில் உள்ள அவரது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.

இவரை ஏப்ரல் 7ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்த நிலையில், கோபிநாத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கறிஞர் கோபிநாத், டிடிவி தினகரன் சுகேஷ் சந்திராவிடம் ரூ.2 கோடி கொடுத்ததை நேரில் பார்த்ததாக ஏற்கனவே சாட்சி அளித்திருந்த நிலையில், அவரது தற்கொலை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவேற்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து,கோபிநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக  கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த வழக்கின் விசாரணை சூடுபிடித்திருக்கும் நிலையில் வழக்கறிஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

இரட்டை இலை விவகாரம்: டி.டி.வி தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன்…