சென்னை; தவெக தலைவர் விஜயின் கரூர் பரப்புரையின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை சென்னை வரழைத்து, அவர்களுடன் தனித்தனியாக விஜய் கண்ணீருடன் கலந்துரையாடினார். அப்போது அவர்களுக்கு ஆறுதல் கூறியதுடன், செலவினங்களை ஏற்பதாகவும், உரியவர்களுக்கு பணி கிடைக்க உதவுவது உள்பட பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செப்டம்பர் 27ஆம் தேதி ‘ அன்று கரூர் வேலுச்சாமிபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கட்சியின் தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தைகள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் ஒட்டுமொத்தத் தமிழகத்தையும் உலுக்கியது. மேலும் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் அரசியல் சதி இருப்பதாக தவெக தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.
இதையடுத்து, வழக்கை விசாரித்த உச்சநுதுமுனுறுமு கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் கரூருக்கு வருகை தந்து, கரூர் மாவட்ட காவல்துறையினரிடம் வழக்கு தொடர்பான ஆவணங்கள் மற்றும் கோப்புகளைப் பெற்றுக் கொண்டு விசாரணை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களை விஜய் இதுவரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவில்லை என்று அரசியல் கட்சிகள் விமர்சனம் செய்தது பேசு பொருளானது. மேலும், அவர் கரூர் செல்லவும் கெடுபிடிக்கள் கொடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனை அடுத்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் காணொளி கால் மூலம் தொடர்பு கொண்டு பேசிய விஜய், அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்போது காவல்துறையினரிடம் முறையாக அனுமதி பெற்று விரைவில் உங்களைச் சந்திக்க வருகிறேன் என்று உறுதி அளித்தார். ஆனால், அவர் கரூர் செல்வதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.
இதையடுத்து, கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சென்னைக்கு அழைத்து வந்து நேரில் சந்தித்துப் பேசத் திட்டமிடப்பட்டது அதன்படி கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர் 41 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மாமல்லபுரத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்களை விஜய் சந்தித்து ஆறுதல் கூறினார்.
இன்று வருகை தந்துள்ள 37 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 235 பேரைத் தனித்தனியாக அறைகளில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டு அறிந்தார். மேலும், உயிரிழந்த நபர்களின் குடும்ப செலவு , மருத்துவச் செலவுகள், குழந்தைகளின் கல்விச் செலவுகள் ஆகியவற்றைத் தானே ஏற்க உள்ளதாகவும், வேலைவாய்ப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுத் தரப்படும் எனவும் உறுதியளித்தார். இந்த உதவிகள் அனைத்தும் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.