மதுரை: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரித்த நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்பது குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் செயல்பட்டுவந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி கடந்த 2018-ம் ஆண்டு, மே 22-ம் தேதி நடந்த போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்தச் சம்பவத்தில் ஸ்னோலின் என்ற மாணவி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பல்வேறு சர்ச்சைகளைக் கிளப்பிய இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் 23.05.2018-ல் ஆணையம் அமைத்து உத்தரவிடப்பட்டது.

இந்த ஆணைய நீதிபதி அருணா ஜெகதீசன், இது தொடர்பாக, நான்கு ஆண்டுகளாக விசாரணை நடத்தியது. விசாரணையின்போது, காவல்துறை அதிகாரிகள், அரசு அதிகாரிகள்,  நடிகர் ரஜினி உட்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி, 3,000 பக்கங்கள்கொண்ட தனது அறிக்கையை 2022-ம் ஆண்டு, மே 18-ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது.  இதைத்தொடர்ந்து, அந்த அறிக்கை சட்டசபைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், இந்த அறிக்கைமீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். ஆனால், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் இழப்பீடும் மட்டும் அதிகரிக்கப்பட்டது.

இதனால், அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கைமீது தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும், நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் 17 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்த நிலையில், அரசு எந்த மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று வலியுறுத்தி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம்,  நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என கேள்வி எழுப்பியதுடன், இதுகுறிதுது  – தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.

ஒரே போலீசார் 4 இடங்களில் துப்பாக்கி சூடு – வரம்புகளை மீறி செயல்பட்டுள்ளனர்! அருணா ஜெகதீசன் ஆணையம் பரபரப்பு குற்றச்சாட்டு…