அங்காரா: பாகிஸ்தானுக்கு விற்பனை செய்வதற்காக போர்க்கப்பல் ஒன்றை கட்டும் பணியை துருக்கி துவக்கியிருப்பதாக அந்நாட்டு அதிபர் தய்யிப் எர்டோகன் தெரிவித்துள்ளார்.
துருக்கி நாட்டிற்கான போர்க்கப்பலான டிசிஜி கினாலியாடாவை அர்ப்பணித்தல் மற்றும் பாகிஸ்தானுக்கான போர்க்கப்பல் கட்டுமானத் துவக்க விழா ஆகியவற்றில் கலந்துகொண்டபோது இதை தெரிவித்தார் எர்டோகன்.
தங்களுடைய சொந்த திறனில் போர்க்கப்பலை வடிவமைப்பது மற்றும் கட்டுவிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் ஆற்றல் படைத்த உலகின் 10 நாடுகளில் துருக்கியும் ஒன்று என்ற எர்டோகன், துருக்கியின் தயாரிப்பால் பாகிஸ்தான் நிச்சயம் பலனடையும் என்று நம்புவதாக தெரிவித்தார்.
கடந்த 2018ம் ஆண்டு ஜுலை மாதம், மொத்தம் நான்கு எம்ஐஎல்ஜிஇஎம் வகை போர்க்கப்பல்களை துருக்கியில் கட்டுவிப்பதற்கான ஒப்பந்தத்தில், பாகிஸ்தான் கடற்படை கையெழுத்திட்டது. இந்த வகை கப்பல்கள் ரேடாரின் கண்களில் சிக்காமல் செல்லக்கூடியது என்று கூறப்படுகிறது.