ரியாத்

ரான் நடவடிக்கைகளால் கச்சா எண்ணெய் விலை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயரும் அபாயம் உள்ளதாக சவுதி இளவரசர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

எண்ணெய் வளம் மிகுந்த  சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் சுத்திகரிக்கும் நிறுவனமான அராம்கோ எண்ணெய் ஆலைகளில் கடந்த மாதம் 14 ஆம் தேதி தாக்குதல் நடந்தது.   ஆளில்லா விமானம் மூலம் நடைபெற்ற இந்த தாக்குதலில் ஈரானுக்குத் தொடர்பு உள்ளதாகச் சந்தேகம் எழுந்தது.  அமெரிக்கா, சவுதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகள் இந்த தாக்குதலை ஈரான் நடத்தியதாகக் கூறி வருகின்றன.

இந்நிலையில் சவுதி அரேபிய நாட்டு பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டி அளித்துள்ளார்.  அந்தப் பேட்டியில் அவர், “செப்டம்பர் 14 ஆம் தேதி சவுதி எண்ணெய் ஆலைகளில் நடந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணமாகும்   இதனால் எண்ணெய் உற்பத்தி பாதிக்கும் கீழ் குறைந்துள்ளது.   எண்ணெய் தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது.    மேலும் கச்சா எண்ணெய் விலை உயரலாம்.

எனவே உலக நாடுகள் இணைந்து ஈரான் மீது கடுமையான தடுப்பு நடவடிக்கைக்ள் எடுக்க வேண்டும்.   இல்லை எனில் கச்சா எண்ணெய் விலை கற்பனைக்கு எட்டாத அளவுக்கு உயரும் அபாயம் உள்ளது.     இது நம் வாழ்நாளில் காணாத அளவுக்கு உயரக்கூடும்.    ஈரானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளை விட அரசியல் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை நான் விரும்புகிறேன். ” எனத் தெரிவித்துள்ளார்.